அமெரிக்காவின் பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்த பனிப்புயல் நிலைமை அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என அந்நாட்டின் தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, பனிப்புயல் அபாயம் காரணமாக, வர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய இடங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயலுடன் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு கடந்த ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மிக மோசமான பனிப்பொழிவாக இருக்கலாம் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, பிரித்தானியாவின் பல பகுதிகள் குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 11 பாகை செல்சியஸை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தின் பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மான்செஸ்டர், பர்மிங்காம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் சுமார் 25 செ.மீ பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜேர்மனியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *