“தாத்தா மறைந்து கொண்டிருந்தார்!” … கதை … சங்கர சுப்பிரமணியன்.


தமிழர் விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள். அதனை மெய்ப்படுத்தி திருவள்ளுவர் ஓர் அதிகாரமே தந்துள்ளார். வீதியில் செல்லும் முன்பின் தெரியாதவர்கள் காலாற தன் வீட்டில் இருந்து செல்லட்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டு திண்ணைவைத்து வீடுகட்டி வாழ்ந்தவர்கள் அல்லவா தமிழர்கள். அப்படிப் பட்டவர்கள் விருந்தோம்பல் என்று வந்தால் விட்டுவிடுவார்களா என்ன?
திருச்செல்வனுக்கு அவனின் தாத்தா தான் நன்கறிந்த ஏற்கும் படியான கருத்துக்களை அவன் மனதில் பதியவைத்தார். பள்ளி செல்லும் மாணவனான அவனும் தாத்தாவைப் போல் கண்ணில் படுபவதை பேசுபவனாக இருந்தான். ஒருநாள் தாத்தா வெண்ணிலவன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறிச் செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் மண்ணைத்தோண்டி நடும்போது சில மண்புழுக்கள் மண்வெட்டி பட்டு துண்டாகி துடித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து,
“தாத்தா நீங்கள்தானே சொல்லித் தந்தீர்கள் தனக்காக பிற உயிர்களை கொல்லக்கூடாது என்றீர்களே?” என்றான்.
“சில செயல்களில் அப்படி பார்க்க முடியாது.
உழவுத் தொழில் செய்யும்போது மாடுகளை துன்புறுத்துகிறோம். உழும்போது எண்ணற்ற மண்புழுக்கள் மடிகின்றன. அதே சமயம் மண்புழுக்களே உழவுத்தொழிலுக்கு உதவவும் செய்கின்றன.” என்றார் தாத்தா.
தாத்தாவின் பதிலால் ஓரளவு சமாதானம் அடைந்தாலும் மண்புழு துடிப்பதைக் கண்டு அவன் முகம் வாடியிருந்தது. இதைத்தான் கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் என்பது. அதில் எதை பதிய வைக்கிறோமோ அதுவே பசுமரத்தாணியாக பதிந்து விடும்.
மாதங்கள் சில கடந்தன. ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த திருச்செல்வன் வீட்டுக்குள் நுழையுமுன்னரே தாத்தா தாத்தா என்று அழைத்துக்கொண்டே வந்தான்.
“ஏல திரு, தாத்தா இங்க இருக்கன்டா”என்று குரல் கொடுத்தபடி தோட்டத்திலிருந்து
வீட்டுக்குள் நுழைந்தார்.
“என்னல விசயம். கை கால் முகத்தை கழுவிட்டு சீருடையை மாற்றியபின் பேசலாம்ல ல”
“இல்ல தாத்தா மறந்துடுவன். உடனே ஒங்கள கேட்கணும்னு தான் நினைத்துக் கொண்டே வந்தேன். அப்பபுறம்னா மறந்துடுவன்”
“அப்படி என்னல, அத்தனை மறக்க கூடாத மாதிரி பெரிய விசயம்?”
“சாவா மருந்து இருக்கா தாத்தா?”
“சாவா மருந்தா?”
“ஆமாம், தாத்தா”
“அப்படி ஒன்னுமில்லடா”.
“அப்படீன்னா, பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியார் சாவாமருந்தப் பத்தி சொன்னாரே?” என்று தாத்தாவைக் கேட்டான் திரு.
அதைக்கேட்ட தாத்தா, “ஓ… அதைச் சொல்கிறாயா? இறப்பைத் தடுக்க மருந்தொன்றும் கிடையாது. திருவள்ளுவர் குறளொன்றில் சொன்னதப் பற்றித்தான் கேட்கிறாய் இல்லையா” என்றார்.
திரு ஆமாம் தாத்தா என்றதும் அது அப்படி இல்லல, ஒருவேளை சாவாமருந்தென ஒன்று இருந்தான்னுதான் சொல்லியிருக்காரு. அவர் அப்படிச் சொன்னதும் தாத்தாவிடம் அப்படியா தாத்தா என்றவனிடம் அக்குறளின் பொருள் உனக்கு புரிந்ததா என்றார்.
புரிந்தமாதிரியும் புரியாதமாதிரியும் இருக்கு என்றான். கற்க கசடற கற்கவென்று அந்த வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதனால் உனக்கு நன்றாக புரியும்படியே சொல்றன் என்றவர் சொல்லத் தொடங்கினார்.
திரு, வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா? இறப்பைத் தடுக்கக்கூடிய மருந்தென்று ஒன்று கிடையாது.
“அப்படி ஒரு மருந்து இருந்தால் என்ன ஆகும் தாத்தா?”
“கடவுளை வழிபடும் இடங்களே இருக்காது”
“ஏன் இருக்காது தாத்தா”
“அமைதியை வேண்டிச் செல்பவர்களைவிட
அதிகமானவர்கள் செய்யக் கூடாதவைகளை எல்லாம் செய்துவிட்டு இறந்தபின் சொர்க்கத்துக்கு போகவேண்டும் என்றுதானே கடவுளை வழிபட அங்கு செல்கிறார்கள். அல்லது எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று வேண்டவே செல்கிறார்கள்.” என்றார்.
தாத்தா சொல்வது அவனுக்குப் புரியாததால் ஒன்றும் புரியாமல் முழித்தான். தாத்தா தன் தவறை உணர்ந்தார். கேள்வி கேட்கவிடாமல் முளையிலேயே கிள்ளி குழந்தைகளின் அறிவை மழுங்கடித்து விடவேண்டும். அந்த படுபாதகச் செயலை செய்ய அவருக்கு மனம் வரவில்லை. அதனால் பேச்சை திசை திருப்பினார்.
சரி அதை இப்போது விடு. நீ வளர்ந்நு பெரியவனானதும் தெரிந்த கொள்வய் என்று சொன்னவர் செக்கு மாடாய் சுற்றி செம்மறி ஆடாய் மாறுவதும் சீர்திருத்தங்கள் செய்து சிறந்து நிற்பதும் அவரவர் கையில்தான்
உள்ளதென மனதில் நினைத்துக் கொண்டார்.
என்ன கேட்டாய் சாவா மருந்து இருக்கிறதா என்றுதானே பேட்டாய். அப்படி
மருந்தென்று ஒன்று நம்மிடம் இருந்தால்கூட அதை விருந்தினர்களை வெளியே வைத்துவிட்டு நாம்மட்டும் சாப்பிடக் கூடாது என்றார்.
ஆர்வமுடன் கேட்டுவந்த அவன் முகம் தாத்தா சொல்லிமுடித்ததும் வாடியதைக் கண்ட தாத்தா, என்னல ஆச்சு. தாத்தா தப்பாக சொல்லி விட்டேனா என்றார் தாத்தா.
அதற்கு திரு சாவாமருந்தையே விருந்தினருக்கு தெரியாம சாப்பிடக் கூடாது என்று மனிதராக திருவள்ளுவர் சொல்லியிருக்காரே கடவுளுக்கு இது தெரியாதா என்று கேட்டான். கடவுளுக்கும் சாவா மருந்துக்கும் இதில் என்னல சம்பந்தம் இருக்கிறது என்றவர் விருந்தினருக்கும்
வீட்டினருக்கும் மட்டுமல்லவா சம்பந்தம் இருக்குன்னு தாத்தா கேட்டார்.
இருக்கு தாத்தா. சாவா மருந்தையே விருந்தினர் வெளியேயிருக்க தெரியாமல் சாப்பிடக்கூடாது என்கிறாரே வள்ளுவர் ஆனால் விருந்தினருக்கும் மேலான தன்னைத் துதிப்பவர்கள் வெளியே இருக்க அவர்களுக்கு தெரிந்தே சாவாமருந்தல்லாத பொங்கலையும் புளியோதரையையும் திரைபோட்டு மறைத்துக் கொண்டு உண்கிறாரே இது சரியா என்று கேட்டதும் தாத்தா ஒரு நொடி அதிர்ந்து போனார்.
பின் சமாளித்துக் கொண்டார். பசுமரத்தாணியாக அந்தங்கள்ளங் கபடமற்ற மனதில் எதை பதிய வைப்பது என்று தெரியாது குழம்பினார். குளிக்கும் போது மறைவில் குளி. சாப்பிடும்போது மறைத்து சாப்பிடாதே. உணவுப் பொருட்களை வீணடிக்காதே ஒருவருக்கு உண்ண எதைக் கொடுத்தாலும் உண்டபின் மீதத்தை கொடுக்காதே என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து வளர்த்த பேரனிடம் என்ன சொல்வதென்று குழம்பினார்.
இறப்பென்பது எல்லோருக்கும் உறுதி. இதையறியா செம்மறி ஆடுகளைப்போல
வளர்ந்து உண்டோம் உறங்கினோம் வாழ்ந்தோம் மடிந்தோம் என்று அவனையும் எல்லோரையும் போல வாழவைக்கவா? விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் என்று பட்டுக்கோட்டையார் சொன்னதுபோல் விதவிதமான பொய்களை வைத்தே புரட்டும் உலகமடா என்று சொல்லி அவனை சிந்திக்க வைக்கவா?
என்று பலமாக எண்ணத் தொடங்கினார்.
மாரடைப்பு நோய் இருந்த அவருக்கு இதற்கு முன் இரண்டு தடவை வந்த மாரடைப்பில் இருந்து தப்பித்து விட்டார். அதனால் அவரிடம் அதிர்ச்சி தரும்படியான செய்தியையோ அல்லது அவருக்கு சிந்திக்கத் தூண்டக் கூடியவைகளையோ சொல்லாதீர்கள் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.
இதையறிந்து அவரிடம் என்ன பேசவேண்டும் எதைப்பேசக் கூடாது என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருந்தார்கள். இதையெல்லாம் சிறுவனான திருவால் எப்படி புரிந்து கொள்ளமுடுயும்? அவன் சாதாரணமாக கேட்டது ஒரு விபரீதத்தை உண்டாக்கும் என்று யாரும் அறிந்திருக்க வில்லை.
பேரனின் கேள்வியால் அதிர்ச்சியடைந்து பலமாக சிந்திக்க தொடங்கிய அவருக்கு இப்போது தான் எங்கோ பயணித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு நாற்காலியில் இருந்தபடியே சரிந்தார்.
தாத்தா நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று சரியவும் பதறிப்போய் தாத்தா தாத்தா என்று திருச்செல்வம் தன் அருகில் நின்று ஆட்டியபடியே அழைப்பது கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தில் கேட்க அக்குரல்
மறைந்து கொண்டிருப்பதை மட்டுமே
அவரால் உணரமுடிந்தது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()