கட்டுரைகள்

வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறுவது போல்?; … வாக்களித்தலில் மீண்டும் மீண்டும் கோட்டைவிடும் தமிழ் வாக்காளர்கள்!…  சி.குருபரன்.

-சின்னத்தம்பி குருபரன்-

சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியல் வரலாறு பெரும்பாலும் சோரம் போனதாகவே காணப்படுகிறது. பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களின் கைத்தடிகளாக இருந்து, அவர்களுக்குச் சோரம் போய் தாம் சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்களின் போலித் தமிழ் தேசியம் பேசிய பசப்பு வார்த்தைகளுக்கும் வீராவேசப் பேச்சுக்களுக்கும் மயங்கி, பசுவைப் பின்தொடர்ந்து செல்லும் கன்றுக் குட்டிகள்போல் பின்தொடர்ந்து சென்றனர் வாக்காளர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியம், தனித்துவம், தமிழர் தாயகம், உரிமை, இனவிடுதலை, தனிநாடு என்றெல்லாம் பேசிப் பேசி இளைஞர்களையும் தமிழ் அடிப்படைவாதிகளையும் உசுப்பிவிட்டனர். இதனால் கடந்த 90 வருடங்களாக இருந்ததையும் பறிகொடுத்துப் பல இழப்புக்களைச் சந்தித்து வந்திருக்கிறோம். அவர்கள் ‘கழுவுற மீனல் நழுவுற மீன்’ போல் சிங்களத் தலைமைகளுக்குச் சோரம் போயக் காட்டாப்புக் காட்டிக் கொண்டு போலி அரசியல் நடத்தி வருகின்றனர். இத்தகைய போலித் தேசியம்பேசிப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த போலி அரசியல்வாதிகளுக்கு நாமும் சோரம் போய் வாக்களித்து வந்திருக்கிறோம். அவர்களும் திருந்தமாட்டார்கள் நாமும் திருந்த மாட்டோம் என உடும்புப் பிடியாய் நிற்கிறோம்.

இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்களில் இன அழிப்பு, இனப் படுகொலை, விரோதம், வன்முறை கலவரம் ஆகியன ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே பெருமளவு நடைபெற்றிருக்கின்றன. 1939 ஆம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்காவினால் கல்லோயாத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது தழிழர் தாயகப் பிரதேசங்களில் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டன. அத்திட்டத்துக்கு உட்பட்ட 40 கொலனிக் குடியேற்றஙகளில் 30 க்கு மேற்பட்ட கொலனிகளில் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களும் அடங்குவர். அவர்களைக் கொண்டு டி.எஸ்.சேனநாயக்கவினால் திட்டமிட்டுத் தமிழர்களுக்கு எதிரான கல்லோயாப் படுகொலை நிறைவேற்றப்பட்டது.

கல்லோயாத் திட்டத்தின் 65 – 70 வீதமான காணிகள் மட்டக்களப்பு (அம்பாறை-திகாமடுல்ல மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்துடன் சேர்ந்து இருந்தபோது) மாட்டத்திலுள்ள சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் எனத் தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார் டி.எஸ்.எஸ்.  கல்லோயாத் திட்டம் நிறைவுற்றபோது திட்டப் பிரதேசங்களில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு 70 வீதம் வரையான காணிகள்  வழங்கப்படும் என்ற சட்ட சபைத் தீர்மானத்தை நிராகரித்துச் செயற்பட்டவராக டி.எஸ்.சேனநாயக்க காணப்பட்டார். இத்தகைய இனவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர் ஆரம்பித்து வைத்த ஐ.தே.கவுக்கு இன்றுவரை தமிழ் மக்களில் கணிசமானோர் மனங்கோணாது வாக்களித்து வருக்கின்றனர்.

1956 பின்னர் இரு ஆண்டுகளுக்கிடையில் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிரான போராட்டம், அதனைத் தொடர்ந்து வந்த இனக்க கலவரம் ஆகியவற்றைத் தூண்டிவிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வாக்களித்து இருக்கிறோம். 1948-11-15 ஆந் திகதி கொண்டு வரப்பட்ட  இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஆறு இலச்சத்துக்கு மேற்பட்ட மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கினர் . அதில் சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம்  (1964) சிறிமா – காந்தி ஒப்பந்தம் (1974) அகியவற்றின் மூலம்  250,000 க்கும் மேற்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளல்கள் பலவந்தமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டபோது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். இத்தகைய வீர தீர சாகசங்களைப் புரிந்த பௌத்த, சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இரண்டுக்கும் தேர்தல்களில் வாக்களித்ததோடு வாய்மூடி மௌனிகளாக இருந்து துரோகமிழைத்த தமிழ் தலைவர்களுக்கும் வாக்களித்துத் தெரிவு செய்திருக்கிறேம்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 1972 முதலாவது குடியரசு யாப்புக்கு ஆதரவாக வடக்கைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதே ஆட்சிக் காலத்தில் யாழ்பாணத்தில் 1974 நான்காவது தமிழாராய்ச்சி மகாநாட்டின் இறுதி நாளன்று 12 இளைஞர்கள் அரச படையினரால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு யாழ் மாநகர பிதா அல்பிறட் துரையப்பா உடந்தையாக இருந்தார். அக்கட்சியைச் சேர்ந்த அவர் தெரிவாவதற்கு யாழ் மக்களே வாக்களித்திருந்தனர். இந்தச் சம்பவம் இளைஞர்கள் மத்தியில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் தோன்றுவதற்கு வித்திட்டது.

ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் 1978 ஆகஸ்ட் இனக் கலவரம், 1981 யாழ் நூலக எரிப்பு, 1983 யூலைக் கலவரம், அதற்குப் பின்னரான உள்நாட்டு யுத்தம் ஆகியன சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டவைகளாகும்.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Crucial to the country's democracyஇத்தனையும் செய்த இரு தேசியக் கட்சிகளுக்கும் நாம் வாக்களித்திருக்கிறோம். 1981 யூன் 04 ஆந் திகதி நடைபெற இருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் நாடு பூராகவும் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின்மீது விசேட கவனம் செலுத்தினார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. அதற்காகப் பல தயார்படுத்தல்களை மேறகொண்டார். ரணில் விக்கிரமசிங்க, காமினி திஸ்ஸநாயக்க, சிறில் மத்தியூ, பெஸ்டஸ் பெரேரா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வீரக்கோன், எஸ்.டி.பண்டாரநாயக்க, எச்.என்.பிரேமச்சந்திர, விமலா கன்னங்கரா, யாழ் மாட்டக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க, கேணல் எல்.சி.ஏ.தர்மபால, ஜெனரல் சேபால ஆட்டிக்கல, பிரிகேடியர் சிறில் ரணதுங்க போன்ற பலரை யாழ் மாவட்ட அபிவிருத்திச் வபைத் தேர்தலுக்கான செயலணியை நியமித்திருந்தார். இதற்கிடையில் ஐ.தே.கவின் யுண்டா எனப்படும் ஆயுதம் தாங்கிய சிறப்புக் குண்டர் பொலிஸ் படை அணியையும் அனுப்பி வைத்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க, காமினி திஸ்ஸநாயக்க, சிறில் மத்தியூ, பெஸ்டஸ் பெரேரா, விமலா கன்னங்கரா ஆகியோர் மே 30 இல் யாழ் சென்று வாடி வீட்டில் தங்கி இருந்தனர். இது யாழ் பொலிஸ் நிலையம், நூலகம், யோகேஸ்வரன் பா.உவின் வீடு ஆகியவற்றுக்கு மிக அண்மையில் அமைந்திருந்தன. அமைச்சர்களின் கட்டளை, அறிவுறுத்தல், ஆசீர்வாதம் என்பவற்றுக்கு இணங்க அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் யுண்டா குண்டர் படையணியினரால் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. மே 31 இரவு யாழ் நாச்சிமார் கோயிலடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அன்றிரவு முழுவதும் யோகேஸ்வரன் பா.உவின் வீடு உட்பட நகரிலுள்ள கடைகள் யாவற்றையும் தீயிட்டுக் கொழுத்தினர். இவை யாவற்றையும் அமைச்சர்கள் அருகிலுள்ள வாடிவீட்டில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தனர். யூன் முதலாம் திகதி இரவு யுண்டா குண்டர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யூன் 2 இல் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், பூபாலசிங்கம் புத்தகசாலை உட்பட காங்கேசன்துறை வீதியிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கடைகளும் எரிக்கப்பட்டன. யூன் 3 இல் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து பல கொலைகள் கொள்ளைகளையும் கடை எரிப்புக்களையும் நிகழ்த்தி பேயாட்டம் ஆடினர்.

மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களைக் கடமையில் இருந்து நீக்கிக் குருநாகல், கொழும்பு மாவட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்களைப் பலவந்தமாக அமைச்சர்கள் நியமிக்கச் செய்தனர். யூன் 4 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமான, படுமோசமான, மொசடித் தேர்தல் ஒன்றை அரசு நடத்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனை வாடி வீட்டில் தங்கியிருந்த அமைச்சர்களும் சிங்கள உயர் அதிகாரிகளும் இராணுவம், பொலிஸ் யுண்டாப் படையும் நடத்திக் காட்டினர்.  அரச பயங்கரவாதத்தைக் கட்டவழத்துவிட்டு இத்தகைய படு பாதகங்களைச் செய்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ரனில் விக்கிரமசிகவுக்கும் மனம் கோணாமல் வாக்களித்திருக்கிறோம்.

2000, 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஐ.தே.கவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட ரனிலுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்த்திருந்தனர். அதற்கு எதிர்மாறாக 2024 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் ரனிலுக்குக் கணிசமாக வாக்களித்திருந்தனர். இறுதி யுத்தத்தின்போது மனிதப் படுகொலைகளை நிகழ்த்திய மகிந்த ராஜபக்சவுக்கு நாமும் வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்தத்தை நடத்தி பேரழிவுகளை ஏற்படுத்திய அப்போதைய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கும் ரோசமில்லாமல் கணிசமாக வாக்களித்திருக்கிறோம்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் மூலம் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை 2008 நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மாகாணங்களைப் பிரிப்பதற்கு, 2005 இல் வ்க்கு, கிழக்கில் சுனாமி நிவாரணக் கட்டமைப்பின தடை செய்வதற்கும் காரணமாக இருந்த தேசிய மக்கள் சக்திக்கும் (ஜே.வி.பி) நிறைவாக வாக்களித்திருக்கிறோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் வாக்களார்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு வெட்பாளரைத் தோல்வியடையச் செய்வதற்காக விரோதிகளுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இது பெரும்பாலன தமிழ் மக்களிடத்தில் உரிய, பொருத்தமான, உண்மையாகவே தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற நபரைத் தெரிவு செய்து வாக்களிப்பதில் தெளிவடையவில்லை என்பதையே அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. சுதந்திரமடைந்த காலப்பகுதில் இருந்து இன்றுவரை போலித் தமிழ் தேசியம் பேசி, பொய், புரட்டுக்கள், ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் செய்து, எடுத்ததற்கெல்லாம் ஊடகவியலாளர்களை அழைத்துப் போலி அறிக்கைகள்விட்டு, யுத்த காலத்தில் அரசின் கைப்பொம்மையாக இருந்து, தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்து பல்லாயிரக் கணக்கானோரின் உயிர் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமானவர்களுக்கும், நிசமாக அரசின் கைத்தடிகளாக இருந்த பெரும்பாலான போலித் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்திருக்கிறோம். ‘மாற்றம் ஒன்றே மாறாததது. அதுவெ நிரந்தரமானது’ என்பதை மனதில் கொண்டு எதிர்காலத்தில் பணம், பொருட்கள், மது என்பவற்றுக்குச் சோரம் போகாமல் வாக்களிப்பதில் விழிப்புணர்வைக் காட்டவேண்டும்.

உள்ளூராட்சிச் சபைகள், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2025 இல் நடைபெற இருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள கட்சிகளும், தமிழ் வேட்பாளர்களும் மானசீகமாக ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தை ஒற்றுமையோடு நிலை நிறுத்த முன்வந்தால் அத்தகைய வேட்பாளர்களக்கு உரிமையோடு வாக்களிப்போம். பிரிந்து நின்று போலித் தமிழ் தேசியம் பேசி, எதிர்வரும் தேர்தல்களில் வாக்குக் கேட்டு வருபவர்களை நிராகரித்து, நமது பிரச்சினை, பிரதேச அபிவிருத்தி என்பவற்றைக் கருத்தில் கொண்டு தேசியக் கட்சிக்கு வாக்களித்து நமது உரிமைகளை வென்றெடுப்பதே சிறந்த மாற்றுச் சிந்தனையாகும். வாக்களிப்பதில் 2015 முதல் சிங்கள மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இன்றும் மாறாது வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோல் 2024 பொதுத் தேர்தலில் நிரூபித்துக் காட்டி இருக்கிறோம். சிங்கள மக்கள் போல் நாமும் விழிப்படைந்து மாற்றத்தை விரும்பி வாக்களிப்பதே போலித் தமிழ் தேசியம் பேசி, போலி வேசம் போடும் அரசியல் அசாமிகளை ஓரம் கட்டுவதற்கு எதிர்வரும் தேர்தல்களைச் சிறந்த பயன்படுத்துவதே மிகப் பொருத்தமானதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *