கட்டுரைகள்

கடந்த காலத்தின் மிச்சமும், தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ள தருணமும் – ஒரு இரைமீட்டல்…  நியூசிலாந்து சிற்சபேசன்

சிற்சபேசன்

இந்துசமுத்திரத்தின் முத்து எனக் கொண்டாடப்பட்ட தேசத்தின் கடந்த 76 ஆண்டுகால வரலாற்றை எண்ணிப்பார்க்கும்போது, “எப்படி இருந்த நான்…. இப்படி ஆயிட்டனே” என்னும் காமெடி நடிகர் விவேக்கின் வசனம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. தடாலடியான திருப்பங்களுக்கு நிர்ப்பந்திக்கபட்ட ஒரு தேசமாகவே இலங்கை ஆகிவிட்டது.

அன்றொருகாலத்தில், மத்தியமலைநாட்டிலே தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கை கணிசமானதாகக் காணப்பட்டது. அதனால், தேர்தலொன்றிலே வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மலையகத்தமிழர் உருவாகினர். அதனைச் சிங்களப்பெருங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால், டிஎஸ் சேனநாயக்க அரசு கணிசமான மலையகத்தமிழர்களை (1949ல்) நாடற்றவர்களாக்கியது. அதுவே தடாலடியான திருப்பங்களின் ஆரம்பமாகியது.

அதன்பின்னர், வல்லான் வகுத்ததே வாய்கால் என்பது விதியாகியது. தடாலடியான திருப்பங்களை ஏற்படுத்துவதே வாடிக்கையாகியது.

1953 ஹர்த்தால் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. அதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் டட்லி சேனநாயக்க பதவிவிலகினார். கொத்தலாவலை பிரதமரானார்.

அன்றையகாலத்திலேயே, மொழி அரசியல் உச்சம் தொட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் வெடிப்புகள் ஏற்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முளைவிட்டது.

1953 ஹர்த்தாலின் அதிர்வு ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தூக்கி நிறுத்தியது.

“சிங்களம் மட்டும்” கோஷத்தை முன்னிறுத்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தேர்தலைச் சந்தித்தார். வெற்றியும் பெற்றார். அதனுடைய தொடர்ச்சியாக “சிங்களம் மட்டும்” சட்டம் (1956ல்) அறிமுகமாகியது. அதுவே, அடுத்த தடாலடியான திருப்பமாகியது.

1970ல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், இடதுசாரிக் கட்சிகளுடனான கூட்டணி அரசொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைத்தது. அ து சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை நிராகரிக்கும் தடாலடியான செயற்பாடுகளை ஆரம்பித்தது. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டுக்கு இடதுசாரிக்கட்சிகள் துணைபோயின. அரசியல் சித்துவிளையாட்டுக்களின் மூலமாக (1972ல்) குடியரசுப் பிரகடனம் மேற்கொள்ளபட்டது. அஃது, தேசத்தின் செல்நெறியைத் தடாலடியாக மாற்றியது.

1977ல் ஜே ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அறுதிப்பெரும்பான்மையுடனான வெற்றி கிடைத்தது. அதுவே தேசத்தைப் புரட்டிப்போடுவதற்கான அத்திவாரமாகியது. 18 தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும், 8 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்ற எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்க, 140 அங்கத்தவர்களைக் கொண்டிருந்த ஜெயவர்த்தன தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டார். புதிய அரசியல்யாப்பை (1978ல்) உருவாக்கினார். விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறையை அறிமுகப்படுத்தினார். அது இலங்கைக்கு பொருத்தமானதா?, தேசத்துக்கான தெளிவூட்டல் கொடுக்கப்பட்டதா?, நீண்டகாலத் தயார்ப்படுத்தல் நடைபெற்றதா? என்பவையெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகும்.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல்முறை, யானையைப் பார்த்துக் குருடன் செய்த விவரணம் போன்ற கதையாகவே இன்றும் காணப்படுகின்றது.

1994 சனாதிபதித் தேர்தலில், சமாதானப்புறாவாக வலம்வந்து, 63விழுக்காடு வாக்குகளூடாகப் பரந்துபட்ட மக்கள் ஆணையைச் சந்திரிகா குமாரதுங்கா பெற்றார். அதிகாரத்தைக் கைப்பற்றியபின்னர் சாயம்வெளுத்தது. சமாதனாப்புறா வேஷம் கலைந்தது.

2010 சனாதிபதித் தேர்தலில் 58விழுக்காடு வாக்குகளூடாக மகிந்த ராஜபக்சா வெற்றிபெற்றார். யுத்தவெற்றியின் நிழலில் எதையும் செய்யலாம் என்னும் வீறாப்புடன் செயற்பட்டார். வடகிழக்கில் நிலஆக்கிரமிப்பு என்பதைத் தாரக மந்திரமாக்கினார். ராஜபக்சா பரம்பரையிடம் அதிகாரத்தை வசப்படுத்தத் துடித்தார். யுத்தம் முடிவடைந்தபோது கிடைத்த தருணத்தைத் தவறவிட்டார்.

அன்றையகாலகட்டத்திலே, மாற்றத்துக்கான குரல்கள்கூட ஈனஸ்வரத்திலேயே ஒலித்தன. மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இம்மியளவும் தெரியவில்லை. ஆனால், மகிந்த ராஜபக்ஸா கட்சியின் பொதுச்செயலாளருக்கு நிறைவேற்றதிகாரப் பசியெடுத்தபோது நிலைமை தலைகீழாகியது.

அதிகாரத்தை கைப்பற்ற எதுவும் செய்யலாம் என்பதற்கு மைத்திரிபால சிறிசேன நிகழ்கால எடுத்துக்காட்டானார்.

குத்துக்கரணம் அடித்தேனும் அதிகாரத்தைக் கைப்பற்ற துடித்தவர்களினால் (2015ல்) உருவாக்கப்பட்டதே நல்லாட்சி அரசாங்கமாகும். அதிலே சிங்கக்கொடி தூக்கி, பட்டுவேட்டி சால்வையில் (மாப்பிள்ளைக்கோலத்துடன்) சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் குலாவிய தமிழர்களும் உண்டு. நல்லாட்சி என்னும் பெயரில் மக்கள் ஆணையைப் பெற்ற தரப்பு மிகமோசமான தடங்களையே விட்டுச் சென்றது.

2019ல் அறுபத்தியொன்பது லட்சம் தனிச்சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற, “வெள்ளைவான்” புகழ் கோத்தபாய ராஜபக்சா, துண்டைக்காணோம் துணியைக் காணோம் என நாட்டைவிட்டு தப்பியோடிய திக்திக் தருணங்கள் ஜூலை 2022ன் சாட்சிகளாகின. அரசன் அன்றறுப்பான்; தெய்வம் நின்றறுக்கும் என்னும் பேச்சுவழக்குச் சொல்லாடலுக்கு உயிர்கொடுத்த சம்பவமாகவும் அதனைப் பார்க்கலாம்.

அரகலய போராட்டம் 2022ம் ஆண்டின் தடாலடியான எழுச்சியாகியது. தெற்கு திரண்டது. வடக்கு வேடிக்கை பார்த்தது. அதனை, 2009ல் தெற்கு பார்த்த வேடிக்கைக்கு கிடைத்த பிரதியுபகாரம் என்றும் கொள்ளலாம். அரகலய மாற்றத்தைக் கோரியது. ஊர் இரண்டுபட்டிருந்தபோது, ரணில் விக்ரமசிங்கவுடைய நிறைவேற்றதிகாரக் கனவு நனவாகியது.

2024 செப்டெம்பர் 21ல் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது. அனுர குமார திசநாயக்க சனதிபதியானார். அதனுடைய தொடர்ச்சியாகவே நவம்பர் 14ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்தன.

தேசத்தை நிர்மாணிப்பதற்கான குரல், பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனைவரை ஒருமித்து ஒலித்திருக்கின்றது.

இது தீர்ப்பல்ல. ஒரு தருணம் மட்டுமே.

இது மாற்றத்தின் ஆரம்பமாகலாம் அல்லது எத்தகைய ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தாமலே கரைந்தும்போகலாம்.

இருண்டமேகங்களிடையே ஒளிரும் மின்னல் போலாகிக் கடந்துவிடுமா? இல்லை, காலையில் உதிக்கும் கதிரவனாகி ஒளிபரப்புமா? என்பதைத் தெரிந்துகொள்ளக் காத்திருக்கவேண்டும்.

Loading

3 Comments

  1. many thanks for your time Sabes
    you haven Answers also
    norther Tamils never united for cause
    GG has voted to send upcountry Tamils
    our Eelam Tamils do not want developement till they get freedom its like hunger strike till their death
    Ninja no income no job annihilation as all younger generation go overseas not worried about freedom
    Now Adk has promised to remove all types of discrimination including our dirty casteism to unite all Sri lankans to develop the country to remove poverty to educate children to be the great human being with God blessing 😀

  2. இன்னுமொரு சிறப்பான அரசியல் வரலாற்றுப் பதிவு. வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

    வரலாறு வருங்காலத்திற்கு ஒரு பாடம் எனச் சொல்வார்கள். ஆனால், பாடம் படிக்க யாரும் இன்றைய காலத்தில் விரும்புவதில்லை என்பது வருத்தத்திற்குரியது!

  3. மீண்டும் ஒரு சிறப்பான அரசியல் வரலாற்றுப் பதிவு. நன்றி, வாழ்த்துக்கள்.

    வரலாறு வருங்காலத்திற்கான பாடம் எனச் சொல்லுவர். ஆனால், இன்றைய காலத்தில் பாடம் படிக்க பலர் விரும்புவதில்லை என்பது வருத்தமான செய்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *