கதைகள்

“நடுகைக்காரி -77″… ஏலையா க.முருகதாசன்

யாகவ ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு

என்று வாசிச்சுக் காட்டி,இந்தக் குறள் திருக்குறள் புத்தகத்தில் 127 வது குறள்,இதையேன் இங்கை எழுதிப் பிறேம் போட்டு வைச்சிருக்கிறார்களென்றால் இந்தக் கடைக்கு வாற சனத்துடன் கண்ணியமாக மரியாதையாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான்.
-ஞானசெல்வம்

தன்னையும்,தங்களையும் ஏளனமாக நினைச்சு மலிவென்று அறிஞ்சால் காகங்கள் மாதிரி குளிக்காமலும் வந்திடுவினம் என்று சத்தமில்லாமல் தனக்குப் பக்கத்தில் நின்ற சிவரஞ்சனியிடம் சிலம்பரசி சொன்னதை துணிகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் காதிலும் விழுந்துவிடுகிறது.

யாரைச் சொல்லகிறியள் என்று சிலம்பரசியிடம் சிவரஞ்சனி கேட்க கண்சாடையில் முன்னால் நின்ற பெண்ணைக் காட்டியதை அந்தப் பெண் கண்டு விடுகிறாள்.

அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை.தன்னைத்தான் சொன்னது என்று தெரிஞ்சு கொண்டாலும்அதை உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் இப்ப யாரை மலிவென்றால் காகங்கள் மாதிரி குளிக்காமல் வந்துவிடுவினம் என்று சொன்னனீங்கள் என்று சிலம்பபரசியைப் பார்த்து அந்தப் பெண் கோபமாகக் கேட்க,நான் உங்களைச் சொல்லவில்லை என்று சிலம்பரசி சொல்லி முடிக்குமுந்தி அப்ப இங்கை துணி வாங்க வந்த எல்லாரையும் காகங்கள் மாதிரி என்றும் குளிக்காமல் வந்தவர்கள் என்று சொன்னீர்களா என்று கேட்க, நான் எல்லாரையும் சொல்லவில்லை என்கிறாள் சிலம்பரசி.அப்படியென்றால் யாரைச் சொன்னனீங்கள் என்று அப்பெண் கேட்க தடுமாறுகிறாள் சிலம்பரசி.

அந்தப் பெண்ணுக்கு வயது பதினெட்டிருக்கும்.கோபத்திலும் அவமானத்திலும் முகமும் கண்களும் அனல் கக்கிக் கொண்டிருந்தது.உதடுகள்; துடிச்சுக் கொண்டிருந்தது.
சொல்லுங்கள் யாரைச் சொன்னனீங்கள் என்று கோபமாக வேகமாகக் கேட்டாள் அந்தப் பெண்.அவளின் கோபக்குரல் இரைச்சலாக இருந்த அந்த இடத்தை ஊசி போட்டால் விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக்கியது.

கடைக்குள் நின்ற அனைவரின் பார்வையும் கவனமும் அந்தப் பெண்ணும் சிலம்பரசியும் சிவரஞ்சனியம் நின்ற பக்கம் திரும்பியது.

என்ன நடந்திருக்கும் என்பதை அறிய ஒரு சிலரும்,ஏன் இந்தப் பெண் இப்படிக் கோபமாகக் கதைக்கிறாள் என்பதை அறிய இன்னும் சிலரும் ஆவலாக இருந்தனர்.

துணி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய பின் சங்கத் துணிக்கடையில் நடந்தது என்ன என்ற தலைப்பில் அயலட்டை வீடுகளில் கதைப்பதற்கு அவர்களுக்கு ஒரு சம்பவம் கிடைத்தவிட்டதென்றும் சிலர் ஆவலாகி யாரோடை அந்தப் பெண் சண்டை பிடிக்கிறாள் என்பதை அறிய சிலர் அந்தப் பெண் நின்ற இடத்துக்கு நெருங்கி வந்தனர்.

அந்தப் பெண்ணும் விடுவதாக இல்லை.சிலம்பரசி சொன்ன வார்த்தைகள் அவள் தன்மானத்தை சீண்டிவிட்டன.

இங்கை நிக்கிறவையைச் சொல்லாட்டில் என்னைத்தானே சொன்னனீங்கள் என்று கேட்ட அந்தப் பெண் இந்த அக்கா யாரைச் சொன்னனீங்கள் என்று கேட்டதற்கு என்னை நோக்கி தலையை உயர்த்தி கண் சாடை காட்டினீங்களே அதை நான் பார்த்தனான் என்றவள் இது உங்கடை சொந்தக் கடையல்ல, இது எங்களுடைய கடை சங்கக் கடை என்பதன் அர்த்தம் தெரியுமா இது மக்களுடைய கடை,என்னைப் பார்த்து குளிக்காமல் வந்திடுங்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு ,நான் குளிச்சனானா குளிக்கவில்லையா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்.

என் சொந்த வாழ்க்கை பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார் என்ற அந்தப் பெண் எப்படித் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்றுகூட உங்களுக்குத் தெரியவில்லை என்னைப் பார்த்த இதுகள் வந்திட்டுதுகளில் சொன்னனீங்கள்.இலக்கணத்தில் இது அஃறிணையாகும் ஆண்பால் பெண்பால் என்பதோ மனிதர்களை எப்படி தமிழ் இலக்கண முறைப்படி அழைப்பார்கள் என்பதுகூட உங்களுக்குத் தெரியவில்லை என அந்தப் பெண் சிலம்பரசியை நோக்கிக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதும்,தனது மகள் இதைப் பெரிசாக்கிறாளே என்ற பதைபதைப்பில் அந்தப் பெண்ணின் தாய் பாறு இனிப் பேசாமலிரு அந்தப் பிள்ளை வாய்தடுமாறிச் சொல்லிப் போட்டுதாக்கும் அதை விடு என்று சொல்ல, அம்மா இது சின்ன விசயமல்ல ஒருத்தரின் சுயமரியாதையில் கைவைச்சு அவமானப்படுத்திற விசயமம்மா என்று சொல்லும் போது பாறு என்ற அந்தப் பெண்ணான பார்வதியின் கண்கள் சிவந்து அவள் கண்களிலிருந்து கோபத்தினாலும் அவமானத்தாலும் கண்ணீர் வழியத் தொடங்கியது.

கடைக்குள் நின்ற அனைவரின் பார்வையும் பார்வதியை நோக்கியே இருந்தது.பார்வதியிடம் நியாயம் இருப்பதாகவே எல்லாரும் உணர்ந்தார்கள்.

புஸ்பாவும் தாயும் பார்வதி நின்ற இடத்தை நோக்கி வர நீலாவும் தமக்கையும் என்னதான் நடக்குது பார்ப்பம் என்று நின்ற இடத்திலேயே நிற்கிறார்கள்.

ஞானம் தாயிடம் ,அம்மா நீங்கள் துணிகளைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு பார்வதி நின்ற இடத்திற்கு அருகில் போய் நின்று அவளையும் சிலம்பரசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கடையின் வடக்குப்புறப் பட்டடையில் பாலகாந்தனும் தர்மராஜனும் துணிகi எடுத்து வாங்க வந்தவர்களுக்கு காட்டுவதும்,விரும்பியவர்களுக்கு வெட்டி எடுத்து துணிகளை மடித்து தெற்குப்புறப் பட்டடையிலிருக்கும் சிலம்பரசியிடம் குடுக்க அவள்: துணிகளை வாங்கியவர்களிடமிருந்து காசை வாங்கிக் கொண்டு பில்லையும் துணியையும் குடுத்தக் கொண்டிருந்தாள்.

தனது வேலையைச் சிலம்பரசி சரியாகச் செய்தாலும் அவளின் வாயால் அங்கு பெரும் சலசலப்பு நடந்து கொண்டிருந்தது.

சிலம்பரசிக்கு பக்கத்தில் நின்ற சிவரஞ்சனியால் பார்வதியைச் சமாதானப்படுத்த முடியவில்லை.அவளுடைய உள்மனசு என்னை யாராவது,பார்வதியைப் பார்த்துச் சொன்னது போல எனக்குச் சொல்லியிருந்தால் எனக்கும் கோபம் வரும்,சில நேரம் நான் கன்னத்தைப் பொத்தி விளாசியுமிருப்பன் என்று நினைச்சவள்,மெதுவாக சிலம்பு நீ சொன்னது பிழை இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால் அந்தப் பிள்ளையிடம் மன்னிப்புக் கேள் என்று சிலம்பரசியிடம் இந்தா இந்தத் துணிக்கு காசை வாங்கு என்று சொல்லிக் கொண்டே அதையும் சொல்கிறாள்.

அதெல்லாம் முடியாது நீ உன்ரை வேலையைப் பார் என்று சிவரஞ்சனி மீது எரிஞ்சு விழுகிறாள் சிலம்பரசி.சிவரஞ்சனியுடன் ஒருமையில் பேசுவதற்கும் எரிஞ்சு விழுவதற்கும் காரணம் சிவரஞ்சனியும் சிலம்பரசியும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படிச்சவர்கள் என்ற உரிமையும் அவர்கள் இப்பவும் நண்பிகள்தான்.

நீ மன்னிப்புக் கேட்காவிட்டால் எனக்குப் பிரச்சினை இல்லை உன்ரை வேலைக்குத்தான் பிரச்சினை வரும் என்று சிவரஞ்சனி சொல்ல வந்தால் வரட்டும் என்று சிலம்பரசி எடுத்தெறிஞ்சு பேசுகிறாள்.

வாங்க வந்தவர்களின் துணிகளை கொண்டு போய்க் குடுத்துக் கொண்டிருந்த பாலகாந்தன் திரும்பி வந்து, சிலம்பரசிக்கு திமிர்,சொல்லக்கூடாத வார்த்தையைச் சொல்லிப் போட்டு மன்னிப்புக் கேட்க மாட்டன் என்று அடம்பிடிக்கிறாள் தாசண்ணை எவ்வளவு நல்லவர்,எதுவுமில்லா விசயத்துக்குக்கூட தான் பிழை விட்டதாக நினைச்சுக் கொண்டு அவர் மனம் ஆறும்வரை சொறி கேட்பார் என்று தர்மராஜாவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.
தனக்கருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்த பார்வதி திரும்பி ஏறெடுத்துப் பார்க்கிறாள்.ஞானம் நிற்பதைக் காண்கிறாள்.அவளின் கண்கள் கலங்கிச் சிவந்திருப்பதைக் கண்ட ஞானத்தால் அதைப் பொறுத்துக் கொள்ளு முடியவில்லை.அவளின் கோபமான, ஏக்கமான, தன்னை அவமானப்படுத்தியதை கேட்க யாருமே இல்லையா என்ற அந்தப் பார்வை அவனை ஏதோ செய்தது.

அவனையே பார்வதியின் கண்கள் குத்திட்டு நின்றன.அவனுக்குள்ளும் போம் எழத் தொடங்கியது அவனையறியாமலே இந்தப் பெண் அழுமளவுக்கு நீங்கள் சொன்ன வார்த்தை அவாவை எவ்வளவு வேதனைப்படுத்திவிட்டது பார்த்தியளா.நானல்ல இஞ்சை நிற்கிற எல்லாருமே நீங்கள் என்ன சொன்னனீங்கள் என்றதைக் கேட்டிட்டார்கள் என்று சொன்ன ஞானம், கிழக்குப் பக்கமாக சுவரிலே கொழுவியிருந்த திருவள்ளுவரின் படத்தோடு இருந்த வாசகத்தைக் காண்பித்து அதிலை என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தீர்களா என்றவன்,
யாகவ ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு
என்று வாசிச்சுக் காட்டி,இந்தக் குறள் திருக்குறள் புத்தகத்தில் 127 வது குறள்,இதையேன் இங்கை எழுதிப் பிறேம் போட்டு வைச்சிருக்கிறார்களென்றால் இந்தக் கடைக்கு வாற சனத்துடன் கண்ணியமாக மரியாதையாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான்.
துணி விற்பனையில் ஏற்படும் புரியாமையினால் கோபம் வருவதோ வாக்குவாதம் வருவதோ வேறு ஒருவரைப் பார்த்து அவரின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிப்பது அலட்சியப்படுத்துவது தாழ்த்திப் பேசுவது வேறு. நீங்கள் பேசியது மகா தப்பு என்று ஞானம் சொல்ல,கல்லுளி மங்கன் மாதிரி நின்றாள் சிலம்பரசி.

நான் இப்படித்தான் இருப்பன் என்பது போல எந்தச் சலனமோ குற்றவுணர்ச்சியோ அவளிடம் காணப்பாடவில்லை.

பார்வதிக்கு அருகில் நின்ற தாய்,இனி அதை விடுங்கோ தம்பி என்றவள் பார்வதியைப் பார்த்து நாங்கள் பாவப்பட்டவர்கள் என்று எல்லாரும் நினைக்கினமாக்கும் வா வீட்டை போவம் என்று சொல்ல.அம்மா எதுக்காக நாங்கள் பயந்து போக வேண்டும் என்றவள் யார் சொன்னது நாங்கள் பாவப்பட்டவர்கள் என்று என்கிறாள்.

ஞானம் சிலம்பரசியைப் பார்த்து கேள்வி கேட்டதை மங்களேஸ்வரியும் தாயும் கேட்டு விடுகிறார்கள்.புஸ்பாவும் தாயும்கூட கேட்டுவிடுகிறார்கள்.

அப்பொழுது ஞானம் சிவரஞ்சனியிடம் அக்கா ஒபீசிலை ஐpஎம் நிற்கிறாரா என்று கேட்க,ஜிஎம்மோடை தலைவரும் நிற்கிறார் என்கிறாள் சிவரஞ்சனி.

நீங்கள் வாங்கள் ஜிஎம்மிட்டைப் போய் கதைப்பம் என்று பார்வதியைக் கூட்டிக் கொண்டு கடையைவிட்டு வெளியே வந்த ஞானம் சங்க அலுவலகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சிலம்பரசி கண்களை லேஞ்சியால் துடைச்சபடி அவளும் நான் போறன் என்று கடையைவிட்டு சங்க அலுவலகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *