கட்டுரைகள்

சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி: அரபு வசந்தத்தின் முற்றுப்புள்ளியா? …  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்த சிரியாவின் தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளமை அரபு நாடுகளில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
 
தலைநகரை தாங்கள் கைப்பற்றி விட்டோம் என்று கிளர்ச்சியாளர்கள் குழுவின் தளபதி ஹசன் அப்தில் கனி கூறியுள்ளதுடன், அசாத்தின் அரசாட்சியை கைப்பற்ற தாம் நீண்ட காலமாக தயார் படுத்தியதாக ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் குழுவின் தலைவர் அகமது அல்-ஷரா தெரிவித்து உள்ளார்)
துனிசியாவில் 2010ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளருக்கு எதிராக மல்லிகைப் புரட்சி என்ற பெரும் கிளர்ச்சி வெடித்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது.
இப்படியாக ஆரம்பித்த அரபு வசந்தம் தான் அரபு நாடுகளிலும, ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆட்சி அதிகாரத்தை மாற்றியுள்ளது.
ஆட்சிகளை கவிழ்த்த அரபு வசந்தம் :
அரபு வசந்தங்களாக எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தின. அரபு வசந்தம் தான் அரபு, ஆப்பிரிக்க நாடுகளின் பேரழிவையும் விளைவித்தது.
இறுதியாக சிரியாவில் தொடங்கிய உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவைச் சந்தித்து நிற்கிறது. இந்த அரபு வசந்தத்தின் தாக்குதலுக்கு அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, சூடானும் தப்பவில்லை.
சவூதி, ஓமன், மேற்கு சகாராவிலும் சாடையாக அரபு வசந்தம் எட்டிப் பார்த்து ஓய்ந்தது.
அரபு வசந்தமும் -அதன் விளைவும்:
அரபு வசந்தமும், அதனுடைய போரின் விளைவுகளும் அந்த பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியில் 600 பில்லியன் டாலருக்கு மேலான நஷ்டத்தை விளைவித்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் பொருளாதர அவையின் ஆய்வு தெரிவிக்கிறது.
அத்துடன் இந்த பிராந்திய நாடுகளின் தேசிய ஒட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்துக்கு இந்த இழப்பு சமம் என்று ஐநாவின் இந்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. போர்களும், பாதுகாப்பின்மையும், சுற்றுலா துறையால் கிடைக்கின்ற வரவை பாதித்து, வெளிநாட்டு முதலீட்டையும் தடுத்து, கடன், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் போன்ற பொருளாதார பிரச்சனைகளை மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சிரியாவில் ஆட்சி மாற்றம்:
போர் மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் அதிகரித்து வருகிறது. சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கையை விட இரு மடங்காக ஆறு இலட்சம் என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டில் அதிபர் அசாத்திற்கு எதிராக டெரா பிராந்தியத்தில் உள் நாட்டு கிளர்ச்சி உருவானது. அது மேலும் பல பிராந்தியங்களுக்கும் பரவிய நிலையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சிக்குழு பலவும் உருவானது.
பல்வேறு கிளர்ச்சி குழுவுக்கும், சிரியா அரசுக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஏராளமான சிரிய மக்கள் அகதிகளாக பல்வேறு உலக நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
பொருளாதாரச் சரிவும் நெருக்கடியும்:
நீண்ட கால யுத்தம் சிரியாவை சீரழித்து, அதன் பொருளாதாரத்தை முடக்கி, உள்கட்டமைப்பை அழித்து, லட்சக்கணக்கான மக்களை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. சிரியாவில் போருக்கு முன்பு இருந்த 2.2 கோடி மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த 68 லட்சம் மக்களில், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மிகக் குறைவான அடிப்படை வசதிகளுடன் நெரிசலான முகாம்களில் வாழ்கின்றனர். அதனை விட கூடுதலாக 60 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவற்றை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தெளிவான பாதை இல்லாமல், இந்தப் போர்ச்சூழல் அடிப்படைத் தேவைகளுக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
பெரும்பாலும் லெபனான், ஜோர்டான் மற்றும் துருக்கியில், 53 லட்சம் அகதிகள் உள்ளனர். வடமேற்கு சிரியாவில் ஏற்கெனவே 20 லட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர்.
இடம் பெயர்ந்தவர்களில் பலர் உதவி பெறும் நம்பிக்கையில் அயல் நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். ஆனால் உள்நாட்டில் இடம்பெயரும் அதிகளவிலான மக்களைப் பாதுகாக்கும் சூழல் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சமீபத்திய மோதலுக்கு முன், 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சிரியாவில் 1.53 கோடி மக்கள் அடிப்படை உதவிகள் தேவைப்படும் நிலையில் இருந்தனர். 1.2 கோடி மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருந்தனர்.
மேலும் பிப்ரவரி 2023இல் துருக்கியின் காசியான்டெப் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம், நிலைமையை இன்னும் மோசமாக்கியது. தற்போதய மோதலின் விளைவாக சிரியாவில் 5,900க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 88 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
எண்ணெய் வயல்கள் மற்றும் முக்கிய வர்த்தகப் பாதைகள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நலன்களும் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டி வருகின்றன. இவற்றோடு, மக்களின் அடிப்படைத் தேவைகள் பிரச்னையும் இணைந்ததால், நாட்டில் அதிருப்தியான கடும் சண்டை நிலவியது.
54 ஆண்டு அசாத் ஆட்சி:
1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்துள்ளது. நாட்டை விட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தலைமையிலான அரசு இறுதி வரை
ஆட்சியில் இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் போர் வெடித்தது. அசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்தது.
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி சிரியாவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
அல்-கொய்தா கிளை அமைப்பான கிளர்ச்சி படை:
சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது தற்போது போரை முன்னெடுத்துள்ளார். ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே தங்களுடைய இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி ஆட்சியை பிடித்துள்ளதால், இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்ட வீரர்களை அரசு வாபஸ் பெற்றுள்ளது எனவும்,அரச படைகள் முற்றாக சரணடைந்து விட்டன.
அத்துடன் டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம் மற்றும் தரயா உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்தும், மிஜ்ஜே இராணுவ விமான நிலையத்தில் இருந்தும் கூட அரசு படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன என கூறப்படுகிறது.
அசாத் தப்பி ஓட்டம்:
சிரிய அதிபராக இருந்த பஷார் அல் அசாத், அதிபர் மாளிகையில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து ஜனாதிபதி அசாத் வெளியேறி விட்டார் என்றும், அவர் சென்ற விமானமொன்று ரேடார் திரையிலிருந்து மாயமாகியுள்ளதாக சில செய்திகள் சொல்கின்றன.
இதேவேளை ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை காணப்படுகிறது.
இதனால் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி அமைந்தது போல, சிரியாவிலும் கிளர்ச்சியாளர்களின் ஆட்சி விரைவில் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு யார்?
இஸ்லாமிய அரசு (IS) என அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். 2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக ‘ஜபத் அல்-நுஸ்ரா’ (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ அமைக்கப்பட்டது.
Syrian residents in Turkey wave a Syrian flag as they celebrate the end of the Baath rule in Syria after rebel fighters took control of Damascus overnight, at the Fatih Mosque, in Istanbul, on December 8, 2024. Islamist-led rebels declared that they have taken Damascus in a lightning offensive on December 8, sending President Bashar al-Assad fleeing and ending five decades of Baath rule in Syria. (Photo by Yasin AKGUL / AFP)

ஆனால் அதன் அடிப்படை வாத கொள்கையை விட, ‘ஜிஹாதி சித்தாந்தம்’ அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது. சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பாரிய இராணுவ குழுவாக இது கருதப்பட்டது.

2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.
சில காலம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற பெயரை இக்குழு உருப்பெற்றது.
மேற்குலகின் பிராந்திய , பொருளாதார நலன்களுக்காகவே அரபு வசந்தங்கள் உருவாகி பல பேரழிவையும் விளைவித்தது எனும் குற்றச்சாட்டும் உள்ளது. லிபியா, யேமனில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தது எனக் கூறப்பட்டாலும் அரபு வசந்தம் தான் அரபு, ஆப்பிரிக்க நாடுகளின் பேரழிவையும் விளைவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *