கதைகள்

”மேற்கத்திய சாரல்”…. சிறுகதை – 96 … அண்டனூர் சுரா

“சிங்காரிச்சி மூக்கை அறுத்தக் கதையா, அந்த பய அப்படியொரு காரியம் பண்ணிருக்கான்டி” காதுகடிப் பேச்சுக்குப் பிள்ளையார்ச்சுழி போட்டாள் சுந்தரி.

“எந்தப் பய, என்ன பண்ணிருக்கான்?” வேம்பு கொடுவாயைச் சுழித்துக் கேட்டாள். அத்தனை பேரும் கொக்கிப் பார்வையில் சுந்தரியைப் பார்த்தார்கள்.

“நேத்தைக்கு பொண்ணுக் கழுத்தில தாலிக்கட்டினப் பய இன்னைக்கு அவளை வேண்டாமுனு சொல்லிப்புட்டான்டி…” என சுந்தரி சொன்னதும் “அடக் கடவுளே..” என்று மொத்தபேரும் முகவாயைத் தூக்கி வைத்துக்கொண்டார்கள்.

“என்ன சுந்தரி இப்படி சொல்லிட்டே! யாரு சேதுபிள்ளை
மவனா?” கேட்டாள் வேம்பு.
“அந்தத் தருதலதான்…”
“ நல்ல பயனாச்சே, ஏன் அப்படிச் செஞ்சான்..?”

“ ஆமாம், நல்ல பய. விரலைக் கொடுத்தா கடிக்கத்தெரியாத பய. அவனைப்பத்தி எனக்குல தெரியும். அவன் அப்பனைத் தூக்கி சாப்பிடுவான் இந்தப் பய. கருமாந்திரம் பிடிச்சவன்…”
“என்னடி சுந்தரி, அவன் தலையிலே இப்படி கொள்ளி வைக்கிறே. அவனை ரொம்ப நல்லவன்ல நினைச்சேன்…” தன் பங்குக்குச் சொல்லிவைத்தாள் மாரியாத்தாள்.

“நானும் அப்படிதான் நினைச்சேன். என்னமோ சுந்தரிதான் அவனைப் பொல்லாதவனு முழுங்குறாள். அவனுக்கும் இவளுக்கும் என்ன கொடுக்கல், வாங்கலோ? சாடை மாடையாக விசாரிச்சி பார்த்திருப்பாள். காதில விழுந்த சேதிய இப்படிப் போட்டு உடைக்கிறாள்…” என்றாள் கல்யாணி தருக்,புருக்கென்று வெற்றிலையை மென்று விழுங்கிக்கொண்டு. அவளது வாயெல்லாம் எச்சில் சொரசொரத்திருந்தது.

“ஏன், ஒரே ராத்திரிக்குள்ளே வேண்டானுட்டான்…?” அத்தனை பேரும் ஒன்றுபோல கேட்டார்கள்.
“சுந்தரி, மொத ராத்திரி எதுவும் நடந்துச்சாம்மா , இல்லையாம்மா?“

“அதுதான் பிரச்சனையே. கோயில், குளத்துக்குப் போயிட்டுவந்து ஒன்னா இருக்க விடுங்கனு பெருசுக சொல்லிருக்கு. அதுல ரெண்டு பெருசுக, விடிஞ்சா ஆடி. பிறகு ஒரு மாசம் வரைக்கும் ஒதுங்கியே இருக்கணும். பயலும் பொண்ணும் அதுவரைக்கும் தாக்குப்பிடிக்க மாட்டாங்கனு அன்னைய ராவே அவக் கையிலே பாலும் பழத்தையும் கொடுத்து சேர்த்துவச்சிட்டாங்க. பாவி பய எப்படா விடியுமுனு இருந்திருக்கான். விடிஞ்சதும் நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு உன்னை எனக்கு பிடிக்கலனு சொல்லி ஆம்பளைத் திமிரக் காட்டிப்புட்டான். அந்த பொண்ணு என்ன பாவம் செஞ்சாலோ உடைஞ்சி உட்கார்ந்து போயிட்டாள்.”

“அதிகம் படிச்ச மூஞ்சூறு கழினிப் பானைக்குள்ள விழுந்தக் கதையால இருக்கு. பய இப்படிப் பண்ணிப்புட்டான். ஒத்த ராத்திரிக்குள்ள அவன் அவளுக்கிட்ட பெருசா அப்படி என்னத்த பிடிக்காததைக் கண்டுப்புட்டான்..” பொறுமினாள் முனியாத்தாள்.

“நம்ம ஊர்ல ஒருத்தன் வெளிநாடுபோய் ஆளா இருக்கானு பெருமையா நினைச்சோம். ஆனா இப்படிச் செஞ்சு ஊர்ப்பெயரக் கெடுத்துப்புட்டான்…” அவனை ரொம்பவே அலுத்துக்கொண்டாள் மாரிக்கண்ணு “ஆமாம், நம்மூராம் நம்மூரு. நம்ம ஊர விட்டு அந்தக் குடும்பம்போய் பல வருசமாச்சே. பிறகென்ன நம்மூரு?”

“சுந்தரி, உன் மக அந்த பொண்ணுக்கூட படிச்சவளாச்சே. உன் மகக்கிட்ட விசாரிச்சா தெரியுமே. எதுவும் விசாரிச்சியா?” கேட்டாள் வேம்பு.
“கேட்காம இருப்பேனா, கேட்டேன்தான்.”
“ என்னவாம் சுந்தரி?”
“அந்த மொகறைக்கட்டைக்கு கலர் பிடிக்கலையாம்“

“என்னடியாத்தா அப்படிச் சொல்லிட்டே! கல்யாணத்து போயிட்டு வந்த அந்தனை ஆம்பளைகளும் மெய்மறந்துல சொன்னாங்க. அழகுனா அழகு அவக் கண்ணு அவ மேலேயே விழும்படியான அழகுனு. அப்படிபட்டவளையா கலர் பிடிக்கலைனு சொல்லிப்புட்டான்?” இதைக் கேட்டு முகத்தைச் சுருக்கிக்கொண்டாள் சின்னப்பொண்ணு.
“ஆமாடியம்மா, என் வூட்டுக்காரரும் பொண்ணோட முகம் காஞ்சிக் காமாட்சினு சொல்லிக்கிட்டு வந்தாக.“ – பத்மனி.

“கத்தரிப்பூ கலரு பட்டச்சேலைய கட்டிக்கிட்டு மணப்பந்தலுக்கு வந்தப்ப கல்யாணத்த பண்ணி வைக்க வந்த மந்திரிங்ககூட கடைக்கண்ணால பார்த்து வழிஞ்சு நின்னதாக எங்க வூட்ட ஆம்பளையும் சொன்னுச்சுடி“ – முத்தாயி.

“ சுந்தரி, நீ சொல்ற மாதிரி அவக் கலர் பிரச்சனையா இருக்காது. சீர்வரிசை , செய்முறை இப்படி எதாவது பிரச்சனையா இருக்கும்” என்றாள் வேம்பு.

“கல்யாணத்து போயிட்டு வந்த நான் இருக்கேன்டி. சீர் வரிசைக்கு என்ன கொறைச்சல். மண்டபமே பண்டமும் பாத்திரமும்தான். நூறு பவுனுக்கு மேல நகை. பீரோலு , கட்டிலு, பொட்டினு எல்லாம் தேக்குல. காரு, அஞ்சு லெட்சம் பணம், கல்லாணச் செலவு பொண்ணு வீட்டோட. இதுக்கு மேலயும் என்ன வெணுமாம்?” என்றாள் கல்யாணி
“பெரிய எடத்து பொண்ணுங்கிறதுனாலே பொண்ணு கல்லாணத்துக்கு முன்னாடி அப்படி, இப்படினு அடுத்தவன்கூட இருந்த விசயம் மாப்பிள்ளைக்குத் தெரிஞ்சுப்போச்சோ என்னவோ?” என்றபடி உதட்டைப் பிதுக்கினாள் காளியாயி.

“அதெல்லாம் இல்ல ஆத்தா..” என்றாள் சுந்தரி.
“என்னடி நீ, அவளுக்குக் குடைப் பிடிச்சவளாட்டம் அதெல்லாம் இருக்காதுங்கிற…” என்றவளாய் இடுப்பை முறித்தாள் காளியாயி.

“என் மவ அந்த பொண்ணுக்கூட ஒன்னாப்படிச்சவ. நிச்சயம் நடந்தப்பவே அவளைப் பத்தி பெருமையா சொன்னாள். பெரிய எடத்து பொண்ணுனாலும் ரொம்ப நல்ல பொண்ணாம். யாரையும் ஏறெடுத்து நிமிர்ந்து பார்க்காதவளாம்…” – சுந்தரி.

“ பிறகு என்னதான் பிரச்சனை?” – வேம்பு
“நான்தான் சொன்னேன் இல்லையா! கலர்தான் பிரச்சனைனு?“

“என்னடி நீ, திரும்பத் திரும்ப கலர்தான் பிரச்சனைங்கிறே. கட்டுனா சிவப்புத் தோல்க்காரி கழுத்திலேதான் தாலி கட்டுவேனு சொன்னான் அந்தப் பய. இப்ப ஏன் கலர் பிடிக்கலைனு சொல்றான்?” கேட்டாள் வேம்பு.

“அந்த அசிங்கத்தை எப்படி என் வாயாலே சொல்றதுனு எனக்குத் தெரில…” யோசித்தாள் சுந்தரி. சற்றுநேரம் யோசித்தவள், “கருப்புதான் எனக்குப் புடிச்ச கலருனு ஒரு பாட்டு இருக்குல?”
“ஆமாம் இருக்கு..?”

“அந்தப் பாட்டுல எல்லா வரியிலயும் கருப்புதான், கருப்புதானு வரும் இல்லையா?”
“ ஆமாம். வரும். “

“அதுல ஒரு வரியில மட்டும் ‘அந்த’ இடம் உனக்குதானு வருமில்லையா?”
“ஆமாம்..”
“‘அந்த’ இடத்த பய சிவப்பா எதிர்பார்த்திருக்கான்.”

அத்தனை பெண்களும் ஒன்றுபோல “ஆ…த்துபூ” என்று எச்சிலைக் காறித் துப்பி வேகமாக மண்ணை சுரண்டுவதும், மண்க்கூடையை தூக்கிவிடுவதும், சுமந்துச்செல்வதும் நடையைக் கட்டுவதுமாக இருந்தார்கள்.

மண்வெட்டிக்கொண்டிருந்த அத்தனை ஆம்பிளைகளும் ஒன்றுபோல தலையைத் தூக்கிப் பார்த்தார்கள். ஊர் பஞ்சாயத்துத் தலைவர் அத்தனை பெண்களையும் ஓர் அதட்டு அதட்டினார். நூறு நாள் வேலை பார்க்கச் சொன்னா ஊர் கதையவா அளக்குறீங்க? அடுத்த வீட்டு பிரச்சனைகளைப் பேசுறது பொம்பளைகளுக்குப் பொழப்பாப் போச்சு. இப்படியெல்லாம் பேசுறதா இருந்தா நாளைக்கு யாரும் வேலைக்கு வரவேண்டாம். சொல்லிப்புட்டேன் ஆமா..” என்று கண்டிப்பதைப் போல சொன்னார் தலைவர். அதன்பிறகு குழுமி நின்ற பெண்கள் காளான்களைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக விலக வேலைசெய்யத் தொடங்கினார்கள்.

சேதுபி்ள்ளை நிலபுலம் படைத்த பெரிய பண்ணையார். பூர்வீகம் மேட்டுப்பட்டி கிராமம். நிலங்களை குத்தகைக்கு விட்டுவிட்டு பக்கத்து நகரில் அவரது குடும்பம் குடியேறி இருபது வருடங்களாகி விட்டன. அவருக்கு ஒரே வாரிசு. பெயர் சிவமேனன். பொறியியல் படிப்பு முடித்துவிட்டு இத்தாலி நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அந்த நாட்டில் ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்தக்கொள்ள போகிறான் என்கிற ஒரு செய்தி ஊரில் அரசல்புரசலாக மூட்டம் கட்டியது. அவனை ஊருக்கு வரவழைத்து அவசர திருமணம் செய்து வைத்துவிட்டார் சேதுபிள்ளை. சொந்தம் பந்தங்கள் கூடி பெண் பார்க்கும் படலம் நிகழ்ந்து நடந்து முடிந்த திருமணம் இது.

பெண் முன்னாள் மந்திரியோட இளைய தாரத்து மகள். பெயர் காயத்திரி. பெயர்க்கேற்ப முகலெட்சணம். இந்திய பெண்களுக்கே உரித்தான சராசரி உயரம். உடை, நடை, பாவனை அலங்காரங்களில் தமிழச்சியின் சாயல்கள். அவள் படித்ததெல்லாம் சொந்த மாவட்டத்தில்தான். பொறியியல் முடித்து ஐதராபாத்தில் அப்பாவுடைய ஒரு பினாமி கம்பெனியில் மேனேஜராக இருக்கிறாள். பெரிய இடத்துப் பெண்ணுக்குரிய பந்தா, பகட்டு, ஆடம்பரங்கள் என்று ஏதுமில்லாத சராசரி பெண்.

மறுவாரம் நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் குளத்து வேலை கூடியது. கடந்த வாரம் காதுகடியாய் பேசிய செய்தியைத் தூசித்தட்டி பேசத் தொடங்கினார்கள். யார் வீட்டு பிரச்சனையைக் கதைத்தாலும் சேதுபிள்ளை வீட்டு பிரச்சனையைக் கதைக்கையில்தான் கதையில் உப்பு, புளி , காரம் தூக்கலாக இருக்கிறது.

அந்தக் குடும்பத்தைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டால் பேச்சு அனுமன் வாலாட்டம் நீண்டுக்கொண்டே போகிறது. மற்ற பேச்சுகளில் இப்படியாக உப்பு, சப்பு இருப்பதில்லை.
நல்லவேலை அன்றைய தினம் பஞ்சாயத்து தலைவர் களத்திற்கு வந்திருக்கவில்லை. ஆயினும் பெண்கள் காதுகடியாகவே அவர்கள் பேச்சைத் தொடங்கினார்கள். பெரிய இடத்து பிரச்சனைக்கு காதும் எங்கேயும் இருக்கும்!

“பிறகு என்னாச்சாம்?” கேட்டு வைத்தாள் கல்யாணி.

“சுந்தரி வந்தாதான் மீத கதை தெரியும். அவ வீட்டுக்கு யாரோ விருந்தாளி வந்திருக்காக. கொஞ்சம் தாமதிச்சு வருவா. வந்ததும் சொல்லிடுவாள்…” என்றாள் வேம்பு.

“ என்ன நடந்திருக்க போகுது? கறந்த பால் காம்புல ஏறிடுமா என்ன? தவளையையும் ஓணானையும் பூட்டி ஏரு ஓட்டின கதைதான் நடந்திருக்கப் போவுது. தவளை தண்ணிக்கு இழுக்கும். ஓணான் பத்தைக்கு இழுக்கும்…”

இதைக் கேட்ட சித்ரா எச்சிலைப் ‘பொழிச்’சென்று துப்பினாள். “இந்தக் காலத்து அதையுமா சிவப்பா எதிர்பார்க்குறான்க“
“ எல்லாம் செல்போன் பண்ற வேலைதான்“
“ அது என்ன பண்ணுதாம்?”

“நல்லா கேட்டே. அவனவன் அதுக்குள்ள பாழானப் படத்த வச்சிக்கிட்டு அந்தப் படத்தோடுல குடும்பம் நடத்துறான்…”
“ இது எப்படி உனக்குத் தெரியும்?“

“நான் ஒரு மைனரைப் பெத்து வச்சிருக்கேனே. அதைப் போய் பாரு. எதாவது ஒரு மரத்தக்கும்கீழே உட்காந்துக்கிட்டு செல்போன கைலிக்குள்ள போட்டுகிட்டு குனிஞ்சத் தலை நிமிராம உட்கார்ந்து பார்த்துக்கிட்டிருக்கும். நான் ஒரு நாளு புள்ள இன்னும் சாப்பிடலையேனு தேடி அழைச்சிக்கிட்டு வரலாமுனு தேடிப்போனேன். எப்போதும் கூப்பாடு போட்டுக்கிட்டு போற நான் அன்னைக்குனு பூனை மாதிரியாட்டம் நழுக்கிடாப் போனேன். பய பவ்வியமாக உட்கார்ந்துக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கான்.”

“உன் மவன் பரவாயில்லே. என் மவன் அவன்சோட்டு பையன்களோட சேர்ந்து டீவியில கிரிக்கெட் பார்க்கிறதாட்டம் பார்த்துத் திரியுறான்…”

“இதுல கண்டிக்க பயமால இருக்கு. நாம கண்டிக்கப்போய் இசகு பிசகா முடிவு எடுத்திட்டா என்ன செய்றதாம். அதான் கண்டும் காணாம இருக்கேன்.”

பேச்சு அவரவர் வீட்டைச் சுற்றி மையம் கொண்டு பிறகு விட்ட இடத்திற்கே வந்தது.
“அட அதை விடு. சேதுபிள்ளை மவன் அதெல்லாம் பார்க்காமலா இருந்திருக்கும்?”
“எப்படி பார்க்காம இருந்திருக்கும்? இத்தாலியில அந்த நாட்டு பொண்ணுங்கக்கூட அப்படி, இப்படினு கூட இருந்திருக்கும்..!”

“செவப்பா வேணுமாம் செவப்பு..” வேம்பு இதைச் சொல்லி குழாயில் தண்ணீர் பொங்குவதைப் போல சிரித்தவள், தலையைத் தூக்கி மேற்கு நோக்கிப் பார்த்தாள். தூரத்தில் வீச்சுநடையில் வந்துகொண்டிருந்தாள் சுந்தரி.

“இன்னும் கொஞ்ச நேரத்தில முடிச்சு அவிழ்ந்திடும்டி.”
“என்னடி வேம்பு சொல்றே?“
“சுந்தரி வந்துக்கிட்டிருக்காள்.“
“அப்படியா! ” என்றவர்களாய் அத்தனை பேரும் ஒன்றுபோல நிமிர்ந்தார்கள்.

“யாரும் அதைப் பத்தி அவக்கிட்ட கேக்காதீங்க. அவ வருகிற வேகத்தில நம்ம மேல எரிஞ்சு விழுந்தாலும் விழுவா. அவளுக்கு தகுந்த ஆளு வேம்பு நீ ஒருத்திதான். நீ கேளு. நீதான் நெளிவு, சுழிவோட கேட்பே.”

“ஆமாமாம். இதை என் தலையில கட்டுங்க” என்றபடி ரொம்பவே சலித்துக்கொண்டாள் வேம்பு.
“இம் வந்திட்டாள், கேளடி..” என தூபமிட்டாள் கல்யாணி.

வேம்பு நிமிர்ந்தாள். அவளது இடுப்பு நெட்டி நெருப்பில் விழுந்த உப்புக் கல்லாட்டம் பறிந்தது. சுந்தரியைப் பார்த்து மெல்ல சிரித்து வைத்து கேட்டாள்.

“சுந்தரி, என்னதுக்கு இப்படி அறக்க , பறக்க வாறே? மெதுவாக வந்தா என்னவாம்.”
“சேதி சொல்லத்தான் இப்படி ஓடிவாரேன்“
குனிந்திருந்த மொத்த தலைகளும் நிமிர்ந்தன.
“ என்னடி சேதி?”

“சேதுபிள்ளை மவனும் அவனைக் கட்டிக்கிட்டவளும் ராசியாகிட்டாங்களாம்…” என்றபடி பற்களைப் ‘பளிச்’சென்று காட்டிச் சிரித்தாள்.

”போகுது போ. நல்லா இருக்கட்டும்.” என்றார்கள் அத்தனை பேரும்.
“ எப்படியாம்?” கேட்டாள் சித்ரா.

“அதானே, அவன் செவப்பால எதிர்பார்த்தான்…?” எடுத்துக்கொடுத்தாள் கனகா.
“பரவாயில்ல இருந்துட்டு போகட்டுமுனு ஏத்துக்கிட்டான்னோ?“ சொல்லிவைத்தாள் மாரிக்கண்ணு.

“அதெல்லாம் கிடையாதாம்“
“பின்னே?“

“ கருப்ப சிவப்பாக்க ஒரு களிம்பு மார்க்கெட்டுக்கு வந்திருக்காம். அதை வாங்கி அப்பிக்கிட்டா சிவப்பாயிடுமாம்…” என்று சொல்லிவிட்டு அத்தனை பேர் முகங்களையும் கவனித்தாள் சுந்தரி.
குழுமி நின்ற அத்தனை பெண்களும் “அப்படியா!” என்று வாய்ப் பிளந்தார்களே தவிர, யாரும் ‘ஆ..த்துப்பூ…’ என்று காறித் துப்பவில்லை.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *