தடையை மீறி செல்ல முயற்சி; ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி., பொலிஸ்!
உ.பி. மாநிலம், சம்பல் செல்ல முயன்ற ராகுலை, பொலிசார் காருடன் தடுத்து நிறுத்தினர்.
உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள மசூதியை கோர்ட் உத்தரவுப்படி தொல்லியல் துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது உள்ளூர் மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர்.
சம்பல் பகுதியில் தொடர்ந்து அசாதாரண நிலை காணப்படுவதால் அங்கு வெளி நபர்கள் நுழைய டிச.10 வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் சம்பல் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் இன்று செல்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, புதுடில்லி-மீரட் சாலையில் காசிப்பூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ராகுலும், பிரியங்காவும் அங்கு வந்த போது அவர்களின் காரை பொலிசார் தடுத்து நிறுத்தினர். உத்தரப்பிரதேசத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை பொலிசார் தடுத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் கண்காணிப்பை போலீசார் பலப்படுத்தி இருக்கின்றனர்.