கதைகள்

”அத்திப்பூ”… கதை – 4 … குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர்… மீனாசுந்தர்

“ஹேய்… ஹேய்… ஹோய்.. ஹோய்.”

ஏர் பூட்டிய மாடுகளிரண்டும் முன்செல்ல தார்க்குச்சியால் தட்டி, லாவகமாய் நிலத்தை உழுது கொண்டிருந்தான் மாரி. ஓரளவுக்கு வயல் பதமாகத் தொடங்கியிருந்தது. முண்டு முடிச்சுகளாய் இருந்த இடங்களில் மீண்டும் சிலமுறை மாடுகளை மடக்கி ஓட்டி கால்களால் மிதித்து விட்டான். இன்னும் கீறாமல் கிடந்த நிலப்பகுதியில் கலப்பையைச் செலுத்தி கைப்பிடியைக் கைகளால் சேர்த்து அழுத்தி திரும்ப திரும்ப உழுதான். குறுக்கும் மறுக்குமாய் அடித்த சாலில் முழங்காலைத் தொடுகிற அளவிற்குக் கூழ் பதத்திற்குச் சேறாகி விட்டிருந்தது காணி. நீரும் சேறுமாய் கிடந்த நிலத்தில் மேழியில் சிக்கிய சிலுப்புப் புற்களும், சாம்பார்புண்டுச் செடிகளும், மீன்முள் செடிகளும், கொளஞ்சிக் குச்சிகளும் யாருக்கோ பயந்து சேற்றுக்குள் ஒளிந்து கிடப்பதைப் போல அங்கங்கே தலை நீட்டிக் கொண்டிருந்தன.

வயலில் போதிய அளவிற்குத் தண்ணீர் சீராகக் கிடந்ததால், தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த வாமடையில் வைக்கோல் கூளத்தைச் சுருட்டித் திணித்தான் மாரி. மண்வெட்டியால் வாய்க்காலோரத்துச் சேற்றைப் பத்தையாய் வெட்டியிழுத்து வைக்கோலின் மீது போட்டு அடைத்தான். பின் கூளத்தை இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளுமளவிற்குச் சேற்றை இடது காலால் பதமாக மிதித்து விட்டான். கூளத்திற்குள் இறங்கிக் கொண்ட சேற்றுத்தடுப்பு, நீரை கசிய விடாமல் வாமடைக்குத் தடுப்புக் காவல் அரணாக நின்று கொண்டது.

சிறுபிள்ளை பருவத்திலிருந்தே மாரி பசி தாங்க மாட்டாதவன். பசி வந்தால் பத்தும் பறந்து போகிறதோ இல்லையோ இவன் பைத்தியமாய்ப் பறந்து கிடப்பான். அவனுக்குப் பசி அடிவயிற்றைக் கிள்ளிப் பிசைந்தது. வயிறு கடாமுடாவெனக் குடலின் மொழியில் கூக்குரல் எழுப்பத் தொடங்கிற்று. சூரியன் கால்வாசி வானம் மேலெழும்பி வந்து ‘சுர் எனச் சுட்ட பிறகும் கூட, அன்று ஏனோ ஆத்தா கஞ்சி கொண்டு வரவில்லையென்பது எரிச்சலை உண்டாக்கிற்று மாரிக்கு.

மாடுகளிரண்டையும் உழுத காணியில் அப்படியே நிலைக்குத்தாய் நிற்க வைத்துவிட்டு கிழாண்டை வரப்போரம் ஓடும் ஓடைப் பக்கமாய் நகர்ந்து வந்தான். ஓடையின் நடுவில் முழங்கால் மூழ்க இறங்கி நின்றவாறு முகத்தில் தண்ணீரை வாரிவாரி அடித்துக் கொண்டான். கை கால்களில் ஒட்டியிருந்த சேற்றைக் கழுவி நீரில் கரைத்து விட்டபோது, அப்போது வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த “அச்சமில்லை அச்சமில்லை” படத்தின் பாடலான “ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டென் சந்தனத்தை..” நினைவில் வந்து மணந்தது.

படத்தில் நடித்திருந்த சரிதாவின் சிரிப்பும், குண்டுகுண்டு விழிகளும், வட்டமுகமும் அவனைக் கிறங்கடித்திருந்தன. சிறிது நேரம் சிலையாய் நின்று நீரோட்டத்தைக் கவனித்தவன், சுதாரித்து மிதந்து வரும் தூசி தும்பட்டைகளைக் கைகளால் ஒதுக்கிவிட்டு தெளிந்த நீரையள்ளி சில மிடறுகள் உறிஞ்சினான். அந்த நேரத்திற்கு அது பெரும் தெம்பைக் கொடுத்தது. தலையில் கட்டியிருந்த பச்சைவண்ண ஈரிழைத் துண்டையெடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் போதே ‘சலக்… மலக்… சலக்’ கென ஓடை நீரில் யாரோ இறங்கி வரும் சப்தம் கேட்டது.

ஆத்தா தான் வந்து விட்டாளோ? என்கிற ஆவலில் சட்டென நிமிர்ந்து நோக்கியவனுக்கு அப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆத்தா வந்தபாடில்லை. கையில் தூக்குச் சட்டியோடுப் பேச்சி தான் வந்து கொண்டிருந்தாள். புடவையை முழங்கால் வரை தூக்கிப் பிடித்து, ஓடும் வாய்க்கால் நீரைக் கடந்து, மிகக் கவனமாய் இக்கரையில் வந்து அவள் ஏறுவதற்கும், மாரி முகத்தைத் துடைத்து முடிப்பதற்கும் சரியாய் இருந்தது. பேச்சியிடம் ஏதாவது கேட்போமா?வென்று தோன்றியது மாரிக்கு. ஆனால் பேச்சி அவனுக்குப் பதில் சொல்வாளா என்பது விளங்கிக் கொள்ள முடியாத புதிராக எழுந்து நின்றது. இருந்தும் கேட்டே விட்டான்.
“ஏ… புள்ள பேச்சி… எங்க ஆத்தாவ அங்குன எங்கயாவது பாத்தியா? நட்டநடுப் பொழுதாகிப் போச்சி.. இன்னும்ங் கஞ்சி கொண்டு வந்த பாடில்லே?”

பேச்சி அவ்விடத்தில் ஒருவன் நிற்கிறான் என்ற பிரக்ஞையே இல்லாமல் சென்று கொண்டிருந்தாள். புடவையை இழுத்து லேசாய் தூக்கியவாறு அழுந்த இடுப்பில் செருகி கொண்டு, தூக்குச் சட்டியைக் கெட்டியாய்ப் பிடித்தபடி முன்னை விட வேகத்தைக் கூட்டி நடந்தாள். இவனுக்கு என்னவோ போலாகி விட்டது. முகம் சுண்டி நின்றவனுக்கு மனசு பொறுக்கவில்லை.

“ஏ புள்ள பேச்சி! ஒன்னயத்தான்ம் புள்ள கேக்குறன்.. காதுல விழுதா? இல்லியா? வார வழில எங்க ஆத்தாவ பாத்தியா?”

பேச்சி திரும்பி வரப்பில் நின்ற நிலையிலேயே அவனை எரித்து விடுவதைப் போல முறைத்துப் பார்த்தாள். கண்களில் ரத்த ஓட்டம் அதிகமாகியிருந்ததை அவளது செம்பழுப்பு விழிகள் சொல்லாமல் சொல்லின. வெளிக்காட்ட வேண்டாமென மனதிற்குள் பொங்கிய ஆங்காரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு சிடுசிடுவெனப் பொறிந்தாள்.

“ஒங்க ஆத்தாவ எங்கேன்னு பாக்குறது தான் எனக்கு வேலையாக்கும்…? இனிமே போறப்ப, வர்றப்போ இப்புடி ஏ புள்ள ஓ புள்ளன்னு கூப்ட்டுக்கிட்டிருந்தா நான்ம் பொல்லாத செறுக்கியா ஆயிடுவேன்… ஒங்கள மாரி சூடு, சொரண இல்லாத மழுங்க சென்மம் நாங்க இல்ல…- ஆமா சொல்லிப்புட்டேன்!”

பேச்சி அவசரத்தில் சுண்டியிழுக்கும் தூண்டிலைப் போல வெடுக்கென்று வெட்டிக் கொண்டு பேசினாள். மாரி அவமானத்தில் துடித்தான். ஒரு நொடி விக்கித்து நின்றவன், பிறகு சுதாரித்துக் கொண்டு திரும்பவும் கேட்டான்.

“இஞ்ச பாரு புள்ள… கொஞ்சம் மருவாதி கொடுத்துப் பேசக் கத்துக்க ஆமா… கேட்ட கேள்விக்கி பதிலு சொல்ல முடிஞ்சா சொல்லணும், இல்லின்னா போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான? சூடு, சொரண பத்தியெல்லாம் பேசற அளவுக்கு நானு இப்ப என்ன தப்பா சொல்லிப்புட்டன்?”
“ம்க்கும்… ஒம்ம ஆத்தாலயே கேளுங்க… எல்லாத்தையும் தெளிவா சொல்லும்..”

மாரிக்குக் கோபம் உச்சத்தில் ஏறி நின்றாலும் பெண் பிள்ளையிடம் அதற்கு மேல் பேசுவது நியாயமில்லையென்று பட்டது.

“கேட்டது தப்பு தான்ம்மா.. மாப்பு வாங்கிக்கிடுறேன்..”

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேச்சி “த்தூ….” என்று வாய்க்கால் நீரில் சப்தமாய்க் காரி உமிழ்ந்தாள். அவளின் கொழகொழப்பான எச்சில் ஓடும் நீரில் மாரியின் மனத்தைப் போலவே கலங்கி, கரைந்தும் கரையாமல் ஆடியாடி சென்று கொண்டிருந்தது. அதனுடன் போட்டிப் போட்டு நடப்பதைப் போல முந்திக் கொண்டு விடுவிடுவெனப் போய் விட்டாள் பேச்சி.
மாரி அப்படியே நிலைகுலைந்து நின்றான். பேச்சி பொறிந்து விட்டுப் போன வார்த்தைகளின் வெப்பம் ஆழ்ரணமாய் அவனை இம்சித்துக் குடைந்தது. ஏதோ செய்யக் கூடாத ஒன்றைச் செய்து விட்டோமோவெனக் குழம்பி நின்றான். பிறகு எப்படியோ தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வயலில் இறங்கினான். மீண்டும் கலப்பையைப் பிடித்து மாடுகளை அதட்டி ஓட்டத் துவங்கினான்.

‘ஹேய்… ஹய்… ஹோய்… ஹோய்…’

கிட்டத்தட்ட பசியே அவனுக்கு மரத்துப் போய் விட்ட நிலையில் தூக்குச் சட்டியை வேக வேகமாய்த் தூக்கிக் கொண்டு ஆத்தா ஓடி வந்தாள். இவன் அவளைக் கவனிக்கும் நிலையில் இல்லை. ஏதோ யோசனையில் மாடுகளோடு மாடாய் நடந்து கொண்டிருந்தான்.
”நேத்தி பேஞ்ச மழயில சுள்ளியெல்லாம் ஈரமாப் போயி எரியவே மாட்டேன்னுட்டுப்பா. ஊதாங்கொலல்ல ஊதி ஊதி என் உசிரு போவாதது தான்ப்பா மிச்சம். அடிவயிறெல்லாம் வலிக்கிது. எங்கண்ணுல்ல.. சித்த நேரம் வந்து சாப்பிட்டுப் போய்யா’

வாஞ்சையுடன் அழைத்தாள் ஆத்தா. அவளின் வார்த்தைகள் எதுவும் அவனது காதில் ஏறியதாகத் தெரியவில்லை. அவன் ஏரின் பிடியைத் தளர்த்தாமல், நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டேயிருந்தான். மாடுகளைக் கட்டுப்படுத்தும் நிலையை மறந்து அவற்றின் போக்கில் இவன் நடந்து கொண்டிருந்தான். மாடுகள் அதனிஷ்டத்திற்குச் சுற்றி சுற்றி வந்து வயலில் சடுகுடு ஆடின. பசியை விடப் பேச்சியின் வார்த்தைகள் அவனைப் பெரிதும் வதைத்தன. அப்போதைக்கு அவனுக்குச் சாப்பிட பிடிக்கவில்லை என்பதை ஆத்தாவிடம் சொல்வதற்குச் சங்கடப்பட்டுக் கொண்டே சொன்னான்.

“அப்புடி வரப்புல வெச்சிட்டு போ ஆத்தா, பிறகு சாப்பிட்டுக்கிறன்” என்றான்.
ஆத்தா எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். அவள் வார்த்தைக்கு மசியவில்லை அவன். மனசு எதிலுமே ஓட்டாமல், காயப் போட்டிருந்த கைக்குட்டைத் துணி அந்தரத்துச் சுழலில் மாட்டிக் கொண்டதைப் போல அல்லாட்டம் போட்டது மாரிக்கு. கலப்பையைக் கை மட்டும் தான் பிடித்திருக்கிறதே ஒழிய, வேறு உணர்வில்லை. எண்ணங்கள் எல்லாமும் பேச்சியைப் பற்றியும், அவள் பேசி விட்டுப் போன சொற்களைப் பற்றியுமே சுழன்று கொண்டிருந்தன.
வரிசை, வரிசையாய் அவனுக்குள் எழுந்த எந்த வினாவிற்கும் விடை தெரியாமல் தவித்தான். பேச்சி வீட்டிற்கும், நமது வீட்டிற்கும் அப்படியென்ன பிரச்சினை? அப்படியும் பேச்சியென்ன பிறத்தியாளா? என் சொந்த அத்தை மகள் தானே! அந்த உணர்வு ஏன் அவளுக்கு அறவே இல்லை? இப்படிப் பேசிவிட்டுப் போக அவளுக்கு எப்படி மனசு வந்தது?
மனம் துக்கத்தைப் பிழிந்து அருந்தி கொண்டிருந்தது.

பொழுது சாய்ந்ததும் கலப்பையிலிருந்து மாடுகளை விடுவித்தான் மாரி. ஓடைக்கரை நீரில் மாடுகளை குளிப்பாட்டிவிட்டு, தானும் குளித்தான். வீட்டிற்குச் செல்ல தூக்குச்சட்டியை எடுத்தவனுக்கு சொரேர் என்றது. அன்று முழுவதும் சாப்பிடாமலேயே பொழுது கழித்து போயிருந்தது அவனுக்கு.
…………………………..
திண்ணையில் ஓரமாய் படுத்திருந்த மாரியின் முகம் வெயில் நேரத்தில் அறுத்த புல்லைப் போல வாடிக் கிடந்தது. வயிறு பசியில் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தது. மல்லாந்து படுத்து கண்களின் மேல் வலது கையை மடக்கி போட்டிருந்தான் மாரி.

ஆத்தா ஓடி அவனை எழுப்பினாள். அவளது குரலில் தாய்மையின் பதற்றம் இருந்தது.
“மாரி… மாரி… எய்யா எழுந்திருப்பா… எங்கண்ணுல்ல.. தூக்குல உள்ள சோத்த ஏங்கண்ணு சாப்புடல..? மொகமெல்லாம் என்னவோ மாரி இருக்கேப்பா.. ஏன்ய்யா? ஏதும் பண்ணுதாப்பா ஒடம்புக்கு? இல்ல நானு நேரங்கழிச்சி கொண்டாந்தேன்னு கோவத்துல சாப்புடிலியா? ஏங் கண்ணு? என்னான்னு சொல்லு ராசா?”

ஆத்தா பதறிக் கேட்ட தோரணையே துக்கமாய் இருந்தது மாரிக்கு
“ஒன்னுமில்லாத்தா நிய்யிப் போயி வேலயப் பாரு. கொஞ்சம் அசதியாருக்கு. அப்பறமா எளுந்திருச்சி சாப்பிட்டுக்கறன்”.

அசதியில் படுத்திருக்கும் பிள்ளையைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று ஆத்தா அத்துடன் நகர்ந்து விட்டாள். திரும்பி படுத்துக் கொண்டவனுக்கு சட்டென கண்கள் துளிர்த்துக் கொண்டன. துக்கம் நெஞ்சு வரை. ஏறி வந்து உதைத்தது. சிறு பிள்ளையாய் ஆறேழு வயதில் பேச்சி தனக்கு உறவென்று தெரிந்து, அவர்களோடுப் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது ஏனென்று கேட்ட போது ஆத்தா சொன்ன நிகழ்வுகள் நெஞ்சில் மீன்குஞ்சுகளாய் நீந்தி ஓடின.

“சொல்லு ஆத்தா…. பேச்சி ஊட்டுக்கும், நம்ம ஊட்டுக்கும் என்ன சண்ட? ஏன்ம் பேச்சியும் அவங்க அப்பாவும் நம்ம கூடப் பேச மாட்டேங்கிறாங்க?”

ஆத்தாவின் முகம் அந்த நொடியே சுருக்கென மாறிப் போனது. ஒன்றுமே சொல்லாமல் முகத்தைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டாள். மாரி நன்றாகக் கவனித்தான். ஆத்தாவின் இரண்டு விழிகளிலும் அனலடித்து நெருப்புப் பொறி பறந்தது.

“ஒனக்கு அதெல்லாம் புரியாதுப்பா. விடுடா கண்ணு”
அப்போதைக்கு அவன் விட்டு விட்டாலும் நாளடைவில் அரசல் புரசலாக எல்லாவற்றையும் ஊரார் வாயிலாக தெரிந்து கொண்டான்.

அத்தைக்கு அப்பா சொன்னபடி நகை, நட்டுகள் செய்யவில்லையென்று பேச்சியின் அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து அத்தையிடம் சண்டை போட்டதும்… அது வாய்த் தகராறாக இருந்து, பின் கை கலப்பாக மாறி, பரம்பரை பகைபோல வளர்ந்து கொண்டே சென்றதும், அந்தப் பகை மூர்க்கமாகி ஒருவரையொருவர் எப்போது காலி செய்யலாமென சந்தர்ப்பம் தேடிக் காத்திருந்ததும், ஒரு கட்டத்தில் அப்பாவை அவர் ஆள் வைத்துக் கொன்றதும், அண்ணன் மேல் உயிரையே வைத்திருந்த அத்தை அந்தத் துக்கம் தாங்காமல் விசமருந்தி உயிரை மாய்த்துக் கொண்டதும், கேள்விப்பட்ட போது அதிர்ந்து உறைந்து போனான் மாரி.

ஒரு சமயம் ஆத்தா பேச்சியை வாய்க்கு வந்தவாறு திட்டிக் கொட்டியது நெஞ்சில் கல்வெட்டாய்ப் பதிந்து நிழலாடியது.

“அந்தப் பேச்சி சிறுக்கிக்கு அவ அப்பன்ங் கொணம்ய்யா…. அதுக்கு தான் அந்தச் சனியன் புடிச்சவளுக்கு கன்னி கழியாம செவ்வாதோசம் புடிச்சி பேயி மாரி அலயிறா!”
சமயம் வாய்க்கும் போதெல்லாம் ஆத்தா என்னென்னவோ காதில் கேட்க முடியாதளவிற்கு கொச்சைச் சொற்களால் பேச்சியை அர்ச்சித்துக் கொண்டேயிருந்தாள். ஆத்திரத்தில் ஆத்தா அள்ளிக் கொட்டும் வார்த்தைக்கும் தேள் கொடுக்கிற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகப் படவில்லை மாரிக்கு. சனியனுக்குச் செவ்வாதோசம் என்று சொல்லும் போது ஆத்தாவின் முகத்தில் எதையோ சாதித்துவிட்டதைப் போன்று வெற்றுப் பெருமையும் சந்தோசமும் கலந்து ஓடின. மாரியின் எண்ணங்கள் ஆழிப்புரட்டலாய் அலை பாய்ந்தன.

பேச்சிக்கு என்ன அழகு குறைச்சலா? கை, கால் ஊனமா? நடத்தைக் கெட்டவளா? என்ன குறைபாடு தான் பேச்சியிடம்? எங்கெங்கிருந்தோ பெண் கேட்டு வருகிறார்கள். வளைத்து வளைத்துப் பேசுகிறார்கள். பெண் மவராசியா இருக்கறா. எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்கிறார்கள். கடைசியில், ஜாதகம், பொருத்தம் பார்க்க வேண்டுமென்று எவனோ ஒரு ஜோசியக்காரனிடம் செல்கிறார்கள். அவன் அத்தனையையும் நொடிக்குள் சுக்கு நூறாக்கி சுக்குக் காப்பியாய்க் கொதிக்கச் செய்து விடுகிறான்.

“செவ்வாதோசமாம் சனியனுக்கு… அதான் ஈடேறாம இருசிச் சென்மமா கெடக்குறா. நல்லவேளை இப்பவே தெரிஞ்சிச்சே… இவள எவன் கட்டினாலும் கொஞ்ச நாள்லயே மாப்புள்ளய காவு வாங்கிடுவாளாம்… அது மூக்கையும், முளியையும் பாரேன். மூளிச்செறுக்கி.. எமனுக்குத் தலச்சன் புள்ள மாரி..!”

ரம்பை, ஊர்வசி என வருணித்த வாய்கள் அப்படியே தலைகீழாய்ப் புரண்டு கண்டமேனிக்கு ஏசி, அலட்சியப்படுத்தி வெளியேறிப் போவார்கள். பேச்சி வாய்க்குள் முந்தானையைச் சுற்றித் திணிப்பாள். அடிவயிற்றிலிருந்து குமுறிவரும் அழுகையையும், அலறலையும் வெளியே கசிய விடாமல் உள்ளுக்குள் புதைப்பாள். கண்கள், கண்ணீரில் குளியல் போட்டு முடிக்கும். இது ஒரு முறை, இரு முறையா?… எத்தனை முறையென எண்ண முடியாமல் இரணமாய் இம்சிக்கும் வாதை.

இது மட்டுமா? ஊர் வாய்களென்ன சும்மாவா இருக்கும்? இப்படிப்பட்ட பெண்களைக் குத்தி குத்தி எடக்கு பேசுவதில் கிராமத்து வாய்களுக்கு அவ்வளவு சுகம்?!

“அந்தச் சிறுக்கிக்கு கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சொரண இல்லியே… ஒரு நல்ல காரியம் கெட்ட காரியத்துக்குக் கெளம்பிப் போவ முடியுதா? எருமமாடு மாரி வளந்து, உலுப்பிக்கிட்டுத் திரியற கெடா கணக்கால்ல லாத்துறா. சனியனுக்குப் பொறந்த சனியன் புடிச்சவ.. கன்னி கழியாம கெடக்கறமே கொஞ்சம் ஒதுங்கி நிப்பமுன்னு நெனக்கிறாளா பாரு? மினுக்கிக்கிட்டு எதிர்ல எதிர்ல வெடச்சிக்கிட்டு வர்றாளே… போற காரியம் உருப்படுமா? ஈடேறுமா?”

கொளத்துல குளிக்கறப்ப,, குடி தண்ணீ புடிக்கிறப்ப, வயல்ல நடவு நடுறப்ப, ஊர்ல உள்ள பலரோட வாய்வளுக்கு இரையாகி, மென்னு துப்பப் பட்டுக்கிட்டே இருந்தா பேச்சி.
அப்பாவையும், அத்தையையும் கொன்ற பிரச்சினை உறவுக்காரர்கள் அத்தனை பேருக்கும் தளராமல் அப்படியே கிடந்தது. செவ்வாய் தோசத்தால் பேச்சியின் திருமணம், தள்ளிப் போய்விட்ட விரக்தியில் பேச்சியும் சரி, அவளின் அப்பாவும் சரி இன்றளவும் மனதிற்குள் நிம்மதியாய் இல்லை.

அப்பாவும், அத்தையும் அநியாயமாய் இறக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் உறவுகள் எப்படியெல்லாம் இனித்திருக்கும்? பேச்சி அவளின் அம்மா அரவணைப்பிலேயே வளர்ந்திருப்பாள். அம்மா இல்லாததால் பேச்சி, குணத்தில் அவள் அப்பாவையே ஒத்திருக்கிறாள். அன்னை இல்லாத வளர்ப்பு தொன்னை தானே என்பது பேச்சி விசயத்தில் அப்படியே பொருந்திப் போய் விட்டது.. அந்த அன்பு, அரவணைப்பு, பாசம், பிரியம், நெகிழ்ச்சி எதுவுமே கிடைக்காமல் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு ரணம்? எவ்வளவு கொடுமை? பாறையில் எப்படிப் பனிரோஜா பூக்கும்? இவ்வளவு வேதனையில் உழலும் அவளிடம் அன்பான வார்த்தைகளை மட்டுமே எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஒரு பெண்ணாக இருந்தும் ஆத்தாவுக்கு ஏனிது புரியவில்லை?. பேச்சியின் வயதொத்த பட்டுக்கண்ணு. வைரஓவியம், மணியாச்சி, பூவாத்தா எல்லோருக்கும் கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையும் ஆகிவிட்டது. அந்த நினைவே.., அந்த நிகழ்வே எவ்வளவு பெரிய துயரம் பேச்சிக்கு? பேச்சி இப்படி யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் சிடுசிடுவென எரிந்து விழுவதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

செவ்வாய்தோசம், பொருத்தம் சரியில்லை என்கிற நொண்டிக் சாக்கு இன்னும் எத்தனை காலத்திற்கு? அப்படியெனில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு எல்லா பொருத்தமும் பார்த்த பண்ணையார் சேவடியப்பன் மகன் சிங்காரம் கல்யாணத்தன்றே ஏன் விபத்தில் இறந்து போக வேண்டும்? ஒரு பொருத்தமும் பார்க்காத கிட்ணப்ப நாயக்கர் பெண்ணும், பூஞ்சாலியார் மகன் சுரேசும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்களே.. வாழ்க்கையில் அவர்கள் எதில் குறைந்து போய் விட்டார்கள்? இரண்டு குழந்தைகளும் ஆளாகிக் குடும்பம் பூத்துக் குலுங்கவில்லையா?

ஒரு சாமானிய மனிதனுக்கும் அதிகமாய் அப்பாற்பட்டுச் சிந்தித்தான் மாரி. இந்நேரம் அத்தை உயிராய் இருந்து பேச்சிக்குத் திருமணம் ஆகாமல் தவித்தால் அத்தைக்கல்லவா அவ்வளவு துயரம்? கட்டுக்கடங்காத மனஅவஸ்தை. ரண வேதனை! அப்படியெனில் அத்தையின் மேல் உயிரையே வைத்திருந்த அப்பா, அத்தையின் வேதனையறிந்து நிச்சயம் துடித்திருப்பாரல்லவா?! அப்பாவின் பிரிவுக்காக உயிரையே விட்டவள் தானே அத்தை! அவளின் தவிப்பு அப்பாவுக்குச் சேரும். அப்பாவின் தவிப்பு எனக்குச் சேரும். அது தானே இயற்கை. மனசு இரண்டும் ஒத்துப்போய் விட்டால் வாழ்க்கையிலென்ன செவ்வாய் தோசமாவது? புதன் தோசமாவது?

அடுத்த ஒரு வாரம் ஓடியிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை காலையிலேயே ஊரெங்கும் நசநசவென அடைமழை பிடித்துக் கொண்டு பேயாட்டம் போட்டது. அடுத்து என்ன நடக்குமோவென ஊரே நடுங்கி கிடந்ததையும் மீறி ஊருக்குள் ஒரே அலப்பறைப் பேச்சாய்க் கிடந்தது.

“மாரியும் – பேச்சியும் ஓடிப் போயிட்டாங்களாம்..”

Loading

2 Comments

  1. ஊருக்கு ஒரு பேச்சி, இப்படி ஊர் வாயால் மென்னு துப்பப்படுகிறாள்.

    செவ்வாய் தோசமாவது…! புதன் தோசமாவது….!

    எழுத்தில் சம்பவம் செய்திருக்கிறீர்கள் அண்ணா வாழ்த்துகள்

  2. படித்துக்கொண்டிருக்கும் போதே என் கண்களும் துக்கத்தைப் பிழிந்து அருந்தி கொண்டிருந்தன..

    இறுதி அத்தியாயம் சற்றும் எதிர்பார்த்திராத சலனத்தையும் புன்னகையையும் எனக்குள் எதிரொலித்தது.

    தொடர்ந்து பயணியுங்கள் அண்ணா. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *