மகாயுதி கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு மோடி வாழ்த்து!
மகாராஷ்டிராவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்காக மகாயுதி கூட்டணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா வெற்றியைக் கொண்டாட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்த டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் உரையாற்றும் போடி மோடி, காங்கிரஸ் மற்றும் அவர்களது நண்பர்களின் சதியை மகாராஷ்டிரா மக்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். மகாராஷ்டிரா தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20 ஆம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
தேர்தலில் மகாயுதி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி 288 சட்டமன்றத் தொகுதிகளில் 236 இடங்களை வென்றது.
அதே நேரத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியால் 48 இடங்களை மாத்திரமே வெற்றி பெற முடிந்தது.
பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 236 தொகுதிகளை கைப்பற்றியது.
இதன் மூலம் மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதேவேளை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
43 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 14 ஆம் திகதியும், எஞ்சிய 38 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட தேர்தல் 20 ஆம் திகதியும் நடைபெற்றது.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் களமிறங்கின.
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில், 56 தொகுதிகளில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பாஜக தலைமையிலான கூட்டணி 24 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன.