மணிப்பூரில் சவப்பெட்டி ஊர்வலம்; தொடரும் பதற்றம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இன பழங்குடியின மக்களுக்கு இடையில் சிறு சிறு மோதல்கள் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.
இக் கலவரத்தால் சுமார் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி மீண்டும் குறித்த பகுதியில் வன்முறை வெடித்ததையடுத்து, அன்றிரவு குகி பழங்குடியினரைச் சேர்ந்த பத்து பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குகி பழங்குடியின மக்கள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை கடத்திச் சென்று அவர்களை சுட்டுக்கொன்று உடல்களை தூக்கியெறிந்தனர்.
இக் கலவரம் தீவிரமடைந்ததையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை காலை பொதுமக்கள் பல இடங்களில் வீதி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மணிப்பூரில் அமைதியில்லா நிலை தோன்றியது.
இதன்படி, கடந்த 11 ஆம் திகதி பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட குகி பழங்குடியினர்கள் பத்து பேரின் உடல்களும் அவர்கள் மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை குகி பழங்குடியின மக்கள் சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவதாக அறிவித்ததோடு, அதில் பங்கேற்கும் பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தனர்.
தற்போது வரையில் அப் பிரதேசத்தில் பதற்ற நிலை காணப்படுவதால் தொடர்ந்தும் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில பொலிஸார் ஆகியோர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.