டெல்லியில் 6 வது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது; விமான போக்குவரத்து பாதிப்பு
இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து 6 வது நாளாக மிகவும் மோசமடைந்துள்ளது. இதன்படி, காற்றின் தரக் குறியீடு 428ஐ எட்டியது.
இந்நிலையில், டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பார்வைத்திறன் 800 மீட்டராக குறைந்ததுடன், இதனால் 107 விமானங்கள் தாமதமாகவும், மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டில்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டில்லியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 400ஐத் தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோசமான காற்றின் தரம் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற கவலைகளை அதிகரித்துள்ளன. இதனால் கண், சுவாசக் கோளாறு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
டில்லியில் உள்ள 33 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களில் 22 மோசமான நிலையங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், காற்று மாசினைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காற்று மாசுக்கான கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
வாகனங்களின் உமிழ்வு, அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்டவற்றால் டில்லியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.
பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரமாக டில்லி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.