மோடிக்கு நினைவாற்றல் இழப்பு; ராகுல் காந்தி விமர்சனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பால் அவதிப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஜோ பைடன் ஒருமுறை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் என்று ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியதை நினைவுயும் ராகுல் காந்தி கூர்ந்தார்.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமராவதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பிரதமர் மோடியின் உரையை கேட்டதாக என் சகோதரி என்னிடம் கூறினார். அந்த உரையில், நாம் எதைச் சொன்னாலும், மோடியும் அதையே திரும்பி சொல்வதாக அவர் கூறினார். எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் நினைவாற்றலை இழந்திருக்கலாம்.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் எல்லாவற்றையும் மறந்துவிடுவார். பின்னால், இருந்து அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. உக்ரைன் ஜனாதிபதி வந்ததற்கு, ரஷிய ஜனாதிபதி புதின் வந்திருப்பதாக அவர் கூறினார்.
அவர் நினைவாற்றலை இழந்திருந்தார். அதேபோல நமது பிரதமரும் நினைவாற்றலை இழந்து நிற்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும், 50 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கவேண்டும் என்றும் நான் மக்களவையில் பேசினேன். ஆனால் நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்ற ரீதியில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக நான் நிற்கிறேன். என்னுடைய புகழைக் கெடுக்க பாஜகவினர் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கின்றனர். யாரைக் கண்டும் நான் அஞ்சமாட்டேன்.
மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். விவசாயிகளையும், சிறு வியாபாரிகளையும் கொல்வதற்காகவே ஜிஎஸ்டியும், பணமதிப்பிழப்பும் கொண்டு வரப்பட்டது” என்று அவர் பேசினார்.