இந்தியா

மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டு விரட்டியடிப்பதற்குப் பெயர்தான் விடியல் அரசா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிவிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

மதுரை முல்லை நகர் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக மக்கள் வாழும் இடம் கண்மாய் இருந்த பகுதி என்றால், மக்கள் அங்குக் குடியேறி வாழத் தொடங்கியவுடனேயே அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இருக்கலாமே? குடியிருப்புகள் அமைக்க அவர்களுக்குத் தடைவிதித்திருக்கலாமே? மாறாக தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்ட 160 மனைகளை வழங்கியது எப்படி? ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, எரிவாயு இணைப்பு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை எப்படி வழங்கப்பட்டது?

வழங்கிய அதிகாரிகள் யார்? வழங்கிய ஆட்சி யாருடையது? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றத்துடிக்கும் அதே இடத்திற்கு, இன்றைய ஆட்சியாளர்கள் வாக்கு கேட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஏறி இறங்கும்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? மதுரை மாநகரில் வென்ற தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த தற்போதைய சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநகரத் தந்தை ஆகியோர் தேர்தலில் நின்றபோது ஆக்கிரமிப்பாகத் தெரியாத வீடுகள், மக்களை ஏமாற்றி வென்றபிறகு ஆக்கிரமிப்பாகத் தெரிவது எப்படி?ஆக்கிரமிப்பென்றால், ஏழைகளின் குடிசை வீடுகளும், எளிய மக்களின் கூரை வீடுகளும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வருவதேன்? ஏன் அவைகள் மட்டும் கண்ணை உறுத்துகிறது?

காலங்காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து ஆக்கிரமிப்பென்று கூறி, அடித்துத் துரத்துவார்களென்றால் தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், பொழுதுபோக்குக் கூடங்கள் என எதுவொன்றிலாவது அரசு கை வைத்திருக்கிறதா? வைக்க முடியுமா? மதுரை மாநகரின் பல அரசு கட்டிடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்தான். அவற்றையெல்லாம் இடித்துத் தகர்த்து, நிலத்தை மீட்க தி.மு.க. அரசிற்குத் துணிவிருக்கிறதா?மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டே தி.மு.க. அரசு விரட்டியடிப்பதற்குப் பெயர்தான் விடியல் அரசா?

அடித்தட்டு உழைக்கும் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்தப் பணத்தில் தங்கள் வாழ்நாள் கனவாக எண்ணிக் கட்டிய வீட்டை இடித்து, அவர்களைக் காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? நெடுங்காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் எளிய மக்களின் வீடுகளை இடித்து, அவர்களின் வயிற்றிலடிக்கும் தி.மு.க. அரசின் செயல் துளியும் மனச்சான்றில்லாத கொடுங்கோன்மையாகும்.

தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைத்திருந்தால் வீடுகளை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது.ஆகவே, மதுரை முல்லைநகர் மக்களின் குடியிருப்புகளை இடித்து அவர்களை வாழ்விடத்தை விட்டே வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.