சீமான் கூட்டத்தில் ஜாதி மோதல்; வெளியேறிய இளைஞர்கள்
திருநெல்வேலியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஜாதி ரீதியாக மோதல் ஏற்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் வெளியேறினர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்டம் தோறும் சென்று, நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டங்களை நடத்துகிறார். நேற்று முன்தினம் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கலந்துரையாடல் முடிந்த நிலையில், நேற்று திருநெல்வேலியில் திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது.
இளைஞர் அணி பாசறையை சேர்ந்த பார்வின் என்பவர் சீமான் பேசியபோது, தமக்கு ஒரு கருத்து இருப்பதாகக் கூறினார். அதற்கு சீமான்,” ஜாதி ரீதியாக முகநுாலில் பதிவிட்டவன் தானே நீ உட்கார்; பேசாதே,” என்றார்.
திருநெல்வேலியில் ஒரு ஜாதி தலைவரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலையிடும் சீமான், இன்னொரு தலைவரின் பிறந்த நாளில் சிலைக்கு மாலையிடாதது ஏன் என பார்வின் முகநுாலில் பதிவிட்டு இருந்தார்.
”இதை வைத்தே, சீமான் பார்வின் மீது கோபப்பட்டுள்ளார். தொடர்ந்து, ”இது என் கட்சி… விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம்,” என சீமான் கூறியுள்ளார்.
”கடையநல்லுாரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் இரண்டாம் கட்ட தலைவரான சாட்டை துரைமுருகன் பேசுகையில், ஒரு ஜாதியை புகழ்ந்து பேசியுள்ளார். அப்படியானால், நாங்கள் ஏன் ஜாதி குறித்து முகநுாலில் பதிவிடக்கூடாது,” என அந்தோணி விஜய் என்பவர் கேட்டார்.
அவரை சாட்டை துரைமுருகன் ஆதரவாளர்கள் தாக்க பாய்ந்துள்ளனர். இதனால் பார்வின், அந்தோணி விஜய், ஞானராஜ் உள்ளிட்ட இளைஞர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
பின் அந்தோணி விஜய் கூறுகையில், ”நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தரப்பினரின் பிடியில் உள்ளது. இனிமேல், இங்கு கட்சி வளராது. இதை கலந்துரையாடலில் கருத்தாக தெரிவிக்க சீமான் அனுமதிக்க மறுத்து விட்டார்,” என்றார்.