பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது
கொமன்வெல்த் ஒஃப் டொமினிகா அதன் உயரிய விருதான டொமினிகா விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
கொவிட் தொற்றின்போது 70 ஆயிரம் டோஸ் ஆஸ்ட்ரோஜெனிகா தடுப்பூசிகளை டொமினிகாவுக்கு அன்பளிப்பாக வழங்கியதோடு, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கும் பல உதவிகளை இந்தியா செய்துள்ளது.
இதற்கு நன்றிக் கூறும் விதமாகவே இவ் விருதை மோடிக்கு வழங்கவுள்ளதாக டொமினிகா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் டொமினிகாவின் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். இரு நாடுகளுக்கும் இடையில் உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ளோம்.
இம் மாதம் 19 முதல் 21 ஆம் திகதி வரையில் ஜோர்ஜ் டவுனில் நடைபெறவுள்ள இந்தியா – காரிகாம் உச்சி மாநாட்டின் போதே இவ் விருது மோடிக்கு வழங்கப்படவுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.