மருத்துவர் தாக்குதல் எதிரொலி …. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இன்று மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜி என்பவரை நேற்று பெண் நோயாளி ஒருவரின் மகன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவரை குத்திய விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை கண்டித்து மாநில அளவில் இன்று இந்திய மருத்துவ சங்கத்தினர் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு தொடர்ந்து செயல்படும் நிலையில், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது.