ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு; நடிகர் விஜய் மத்திய, தமிழக அரசுகளுக்கு அழுத்தம்
இலங்கையில் ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர. பொதுவாக்கெடுப்பு நடத்த மத்திய மற்றும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான விஷயங்களில் தமிழக அரசைக் கலந்து ஆலோசித்து இந்திய வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு தீர்மானம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், ஈழத் தமிழரான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டவர். சங்கீதாவின் குடும்பம் லண்டனில் வசித்து வருகிறது. ஈழத்தின் மருமகன் நடிகர் விஜய்.
இந்த நிலையில் ஈழத் தமிழர் பிரச்சனை மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன? நடிகர் விஜய் ஏன் மவுனம் காக்கிறார்? என கேள்விகள் எழுப்பப்பட்டன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் ஞாயிறு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம் என்ற தலைப்பில் இது நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மான விவரம்:
இலங்கை தொடர்பான விஷயங்களில் தமிழக அரசைக் கலந்தாலோசித்து, வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பொது வாக்கெடுப்பு: ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
கச்சதீவு: கச்சதீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடுக்கடலில் தொடருகிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன்பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐநா கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.
வழிகாட்டிகள் என்ன?: தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள், தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக் கொள்ள ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி, மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும்; அவர்களைக் கைது செய்யவோ; சிறைபிடிக்கவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைபிடிக்கவில்லை; மத்திய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவில்லை.
மீனவர்களுடன் போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் இந்த சர்வதேசச் சட்டத்தை வலியுறுத்தி மீனவர்களுடன் இணைந்து போராடும் என்பதை இச்செயற்குழு அறிவிக்கிறது.