தடையை மீறி எருமைகள் சண்டை; மாவட்ட ஆட்சியரிடம் முறைப்பாடு
தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் எருமைகள் சண்டை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கோவர்த்தன பூஜை முடிவடைந்த பின்னர் இராணுவக் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற எருமைகள் சண்டை நிகழ்ச்சியில் இரண்டு எருமைகள் ஆவேசமாக மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகின.
மக்கள் கைகளில் தடிகளை பிடித்தபடி எருமைகள் ஓடிவிடாமல் இரண்டும் மோதிக்கொள்ள தூண்டுகின்றனர். இம் மோதலில் இரத்தக் காயங்களுடன் எருமைகள் சண்டையிடுவதை பார்த்த மக்கள் ஆரவாரத்துடன் குதூகலிக்கின்றனர்.
பல வருடங்களாக இந்த எருமைகள் சண்டை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இச் சண்டையின்போது சில சமயங்களில் எருமைகள் இறந்து போவதும் உண்டு. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் வந்ததால், நான்கு வருடங்களுக்கு முன்னர் எருமைகள் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது.
இத் தடையையும் மீறி இவ் வருடம் மீண்டும் இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
எருமைகளின் உரிமையாளர்கள் பந்தயம் நடத்தி அதன் மூலம் பல இலட்சம் பணம் பெறப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனர் மேனகா காந்தி, பரேலி மாவட்ட ஆட்சியரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இம் முறைப்பாட்டைத் தொடர்ந்து தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான குழு இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது.