யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது; ரசிகர்களை கண்டித்த விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அதே விறுவிறுப்புடன் கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார்.
திரையுலகை தாண்டி, அரசியலுக்கு வந்துள்ள விஜய் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கண்டிப்புடன் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த செயற்குழு கூட்டத்திலும் விஜய் இதை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறார். அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமல்ல, திரையுலகில் முன்னணியில் இருக்கும் ரஜினி, அஜித் உள்ளிட்டோர்களையும் எந்த வகையிலும் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்யாதீர்கள் கூறியிருக்கிறார்.
ரஜினி, அஜித் படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும், விஜய் படங்கள் வெளியாகும்போது ரஜினி, அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்வது வழக்கமான ஒன்று.
திரைப்படங்கள் தொடர்பாக தனது ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் உள்ள மோதலை, அன்பு என்னும் புள்ளியில் இணைக்கும் வகையிலும், காலம், காலமாக நடந்து வரும் தல-தளபதி போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், சமீபத்தில் கோட் படத்தில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடையும் வகையில் காட்சி ஒன்றும் அமைக்கப்பட்டது. அதேபோல் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நலம் பெற விழைகிறேன் என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இருப்பினும் வலைத்தளத்தில் ரஜினி-விஜய், விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் என்பது குறைந்தபாடியில்லை. இதற்கிடையில் அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்திடம், விஜய் மாநாடு குறித்து கேட்கப்பட்டபோது, , விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள் என்று தெரிவித்தார். இதை தனது கட்சி செயற்குழு கூட்டத்தில் விஜய் கூறி நெகிழ்ந்திருக்கிறார்.
இதற்கிடையே திரையுலகில் தான் நிறைவாக ஒப்புக்கொண்டுள்ள எச்.வினோத் இயக்கும் படத்திற்கான படப்பிடிப்பில் விஜய் விரைவில் இணைய உள்ளார். இந்த படத்தின் மூலம் அனைத்து நடிகர்களையும் மனங்களையும் வெல்லும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசியலில் தனது பாதைக்கான முன்னோட்டமாக அந்த படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
சினிமாத்துறையில் தனக்கு போட்டியாளர்களாக இருப்பவர்களின் ரசிகர்களை தன் அன்பு பிடியில் கொண்டு வருவதற்கான விஜய்யின் அரசியல் வியூகம், என நிபுணர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.