இலங்கை

தமிழ்த்தேசிய இலக்கையும் தமிழரின் அபிலாசையையும் மறந்து விமர்சிப்போருக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பர்

தம்முடைய வெற்றி ஒன்றையே நோக்காகக்கொண்டு தமிழ்த்தேசியத்தின் இலக்கையும் மக்களின் அபிலாசைகளையும் மறந்து மற்றைய வேட்பாளர்களை மிக மிக மோசமாக விமர்சிப்பவர்களுக்கான பதிலடியை வாக்களிப்பின்போது மக்கள் வழங்குவார்கள் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மகிழவெட்டுவானில்  சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பிலேயே ஜனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,எமது மக்கள் எமது மண்ணில் கௌரவமாக, சுதந்திரமாக, சமத்துவமாக வாழ்வதற்கான அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு ஆயுதப் போராளியாக, தமிழ்த் தேசியப் போராட்டத்துக்குள் நுழைந்தேன். அதே தீவிரத்துடன் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறேன். தமிழரின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதே இறுதி இலக்கு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இணைந்திருக்கின்ற ஆயுதப் போராட்டப் பின்னணி கொண்ட கட்சிகளின் ஆதரவுடனேயே தமிழரின் ஒருமித்த ஒரு அரசியற் பலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்பட்டது. இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்த பெரும்பான்மை வாக்குகளால் தேசியப் பட்டியலைப் பெற்று அரசியலுக்குள் நுழைந்தவர்களும், பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து வந்தவர்களும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான செயற்பட்டில் ஈடுபட்டு வருவது கவலையளிக்கிறது.

பேரினவாதக்கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறமுடியாமல் தம்முடைய அரசியலை நிலைநாட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தஞ்சம் புகுந்தவர்கள், உண்மையில் தமிழ் தேசிய அரசியலில் தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கி வருகின்ற தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காக ஆயுதமேந்திப் போராட முன்வந்து அவர்களின் வாழ்க்கைகளைத் தொலைத்தவர்களைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது.

எத்தனை விமர்சிப்புகள், தூற்றல்கள் வந்தாலும், தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான போராட்டம் சரியானதொரு தீர்வு கிட்டும் வரை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். இந்தத் தொடர்ச்சியான போராட்டம் தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கையான சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் என நாம் நம்புகின்றோம்.

இந்த நிலைப்பாட்டுக்காகவே தமிழ் மக்களுடைய ஒற்றுமையை விரும்புகின்ற செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தற்போது சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்தச் சங்குச் சின்னத்தை ஆதரிப்பது தமிழ் மக்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தி வருகின்றவர்களுக்கான பதிலடியாகவும் இருக்கும்.

இந்த விமர்சிப்பு வேடிக்கைகளுக்கு மக்கள் தலையசைப்பது ஒத்திசைவல்ல, தமிழ்த்தேசிய நலன் ஒன்றே தம்முடைய கொள்கை, தமது வாழ்க்கை என்று செயற்படுவர்களை ஆதரிப்பதே காலத்தின் தேவை என்பதனை உணர்ந்தமையினாலாகும். இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் முயற்சியில் அரசியல் மேட்டுக்குடிப் பாணியில் மழுங்கடிக்கச் செய்ய முனைபவர்கள் இதற்கான பதிலடியை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயமான வலியுறுத்தலுடன் பாண்பார்கள்.

தமிழ்த் தேசியம் ஒன்றே கொள்கை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளே இலக்கு. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்குச் சின்னத்துக்கு வாக்களிப்போம் பெரு ஆதரவுடன் வெற்றிபெறச்செய்வோம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.