70 முகாம்களில் 2789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.
வீதிகளில் குளம் போல் நீர் தேங்கி நிற்பதால் வாகனப் போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னையில் சுமார் 70 நிவாரண முகாம்களில் 2789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கணேசபுரம், ஸ்டோன்லி ஆகிய சுரங்கப் பாதைகளைத் தவிர ஏனைய சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை.
தண்ணீர் தேங்கி நிற்கும் 715 பகுதிகளில் 512 இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளன.
3,20,174 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, மாநிலம் முழுவதிலும் 1293 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 77,877 நோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டனர் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.