ரத்தன் டாடாவை வெகுவாக பாதித்த மும்பை தாக்குதல்!
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவம் தன்னை வெகுவாக பாதித்ததாக பேட்டி ஒன்றில் ரத்தன் டாடா கூறினார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் தீவிரவாதிகள் 10 பேர் மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். அதில் ஒன்று தாஜ் மஹல் பேலஸ் ஓட்டல். அங்கு 11 ஊழியர்கள் உட்பட 33 பேர் இறந்தனர். அப்போது அதை நடத்தும் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவர் ரத்தன் டாடா.
இச்சம்பவம் குறித்து மறைந்த ரத்தன் டாடா கடந்த 2010-ம் ஆண்டு அளித்த பேட்டியில் கூறியதாவது: மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்த தினம் எனது வாழ்க்கையில் மிக மோசமான நாள். டாடா நிறுவனம் நெருக்கடியாக இருந்த சூழலில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவம் எனக்கு தனிப்பட்ட சோகம். இது இன்னும் எனது மனதை வெகுவாக பாதிக்கிறது. தேவையற்ற கண்மூடித்தனமான தாக்குதல் இது. அதை நினைத்து பார்த்தாலே சோகத்தை கட்டுப்படுத்த முடியாது.
உலகம் முழுவதும் எஃகு தொழில் சந்தை முடங்கி எங்கள் நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தது. தாஜ் ஓட்டலில் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமானது. ஆனால் ஒருமாதத்தில் ஓட்டலை சீரமைத்து மீண்டும் திறந்தோம். சீரமைப்பு பணிக்காக சுமார் ரூ.8 ஆயிரம் கோடி செலவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.