பொது இடங்களில் குப்பைகள் கொட்டத் தடை; டிஜிட்டல் கருவி மூலம் விதிக்கப்படவுள்ள அபராதம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினமும் ஏழாயிரம் தொன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதித்திருந்தாலும் அதனையும் மீறி குப்பைகள் கொட்டப்படுகின்றன.
அதன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறி குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில், அபராதப் பணத்தை ரூபாய் 500 இலிருந்து 5 ஆயிரமாக மாநகராட்சி அதிகரித்தது.
அதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களுக்கு ரூபாய் இரண்டரை இலட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக அபராதத் தொகையை விதிக்கும் செயற்பாட்டை டிஜிட்டல் மயமாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து பொலிஸார் அபராதம் விதிப்பதற்கு பயன்படுத்தும் கருவியைப் போன்று டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது.
இதன் முதல் கட்டமாக 500 டிஜிட்டல் கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளதோடு 15 பிரிவுகளில் அவற்றை வழங்கும் செயல்திட்டம் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த டிஜிட்டல் முறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.