இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை; நிராகரித்த பாகிஸ்தான்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்லாமாபாத் செல்ல உள்ள நிலையில், இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுகள் நடத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லும் தூதுக்குழுவை எஸ்.ஜெய்சங்கர் வழிநடத்த உள்ளார்.
பாகிஸ்தான் பயணத்தின் போது இருதரப்பு பேச்சுகளுக்கான வாய்ப்புகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விகளை எஸ்.ஜெய்சங்கர் நிராகரித்துள்ளதுடன், அவ்வாறான எவ்வித நகர்வுகளும் இடம்பெறாதெனவும் பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் எஸ்.ஜெய்சங்கரின் வருகை கருத்து கூறியுள்ளதாவது,
”ஒக்டோபர் 15 முதல் 16 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் 23 ஆவது மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.
அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்க தயாராக உள்ளோம். எஸ்.ஜெய்சங்கரின் வருகையானது பலதரப்பு நிகழ்வுக்காகவே உள்ளது. பாகிஸ்தான்-இந்திய உறவுகளைப் பற்றி விவாதிப்பதற்காக அவர் வரவில்லை.” என்றார்.
கடந்த ஒன்பது வருடங்களின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதனால், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய இந்திய வெளிவிகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் பற்றிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் 2015ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.