நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட பாம்பன் பாலம்: அப்துல்காலம் பிறந்தநாளில் திறக்க தீர்மானமா?
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டு ஆங்கிலேயேரால் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
மிகவும் பழைமையான பாலம் என்பதால் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன.
இதன் காரணமாக பாம்பன் தீவிலுள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
இப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக ரூபாய் 550 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் புதிய ரயில் பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் ஆரம்பித்தது.
500க்கும் அதிகமான தொழிலாளர்களின் உழைப்பில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 மீட்டர் உயரத்தில் 2,078 மீட்டர் நீளத்தில் இப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ரயில் பாலத்தின் நடுவில் நவீன வசதிகள் உள்ளடங்கிய தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் முறையாக மோட்டார்களின் மூலம் ஹைட்ரொலிக் லிப்ட் வசதியுடன் அமைக்கப்பட்ட தூக்குப் பாலம் இதுவாகும்.
அதேபோல் இன்னும் பல வசதிகளுடன் 100சதவீதம் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதன்படி இப் பாலத்தின் உறுதித் தன்மையை சோதிக்கும் வகையில் கடந்த மாதம் சோதனை ரயில் ஓட்டம் மற்றும் தூக்கு ரயில் பாலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
அந்த வகையில் இப் பாலத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளான ஒக்டோபர் 15ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைப்பதற்கு பாம்பன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது வரையில் அது உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் பிரதமர் விழாவில் பற்கேற்றால் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் நடத்தி வருகிறோம். இம் மாத இறுதிக்குள் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்” எனவும் கூறியுள்ளார்.