அமெரிக்காவில் இந்துக் கோயில் அவமதிப்பு சம்பவம்; இந்தியா கடும் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் BAPS ஸ்ரீநாராயண் கோயில் அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செப்.24-ம் தேதி இரவு சான்பிரான்சிஸ்கோவின் சாக்ரமெண்டோவில் உள்ள பிஏபிஎஸ் ஸ்ரீசுவாமிநாராயண் கோயிலில் நடந்த அவமதிப்புச் செயலை இந்திய துணை தூதரகம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த விவகாரம் உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செப்.24-ம் தேதி கோயில் நிர்வாகத்தின் எக்ஸ் பக்கத்தில், “இந்துக்களே திரும்பிச் செல்லுங்கள்” என்ற முழக்கத்துடன் பிஏபிஎஸ் ஸ்ரீசுவாமிநாராயண் கோயில் அவமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நியூயார்க்கின் மெல்வில்லேவில் உள்ள பிஏபிஎஸ் கோயில் அவமதிப்புச் சம்பவம் நடந்த அடுத்த நாள் கலிபோர்னியா சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து உள்ளூர் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தக் காழ்ப்புணர்ச்சி சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சுவரில் எழுதியிருந்த வாசகங்களில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிரான செய்திகளும் இடம்பெற்றிருந்தன என்று தெரிவித்துள்ளது.
சாக்ரமென்டோ ஷெரீப் அலுவலம் கூறுகையில், “நாச வேலையில் ஈடுபட்டவர்கள் கோயில் சுவற்றில் வெறுப்பு வாசகங்களை எழுதியும், தண்ணீர் குழாயை சேதப்படுத்தியும் உள்ளனர். ஷெரீப் அலுவலகம் சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
அதன் எக்ஸ் பக்கத்தில், “இது வெறுப்பு குற்றமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து அண்டை மாநிலங்களுக்கும் மத்திய சட்ட அமலாக்கத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இந்த விவகாரத்தில் உதவுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு செப். 17ம் தேதி நியூயார்க்கின் மெல்வில்லில் உள்ள பிஏபிஎஸ் கோயிலும் வெறுப்பு வாசகங்களால் இதே போல் அவமதிக்கப்பட்டதும். ஜூலையில் கனடாவின் எட்மோன்டனில் உள்ள பிஏபிஎஸ் கோயில் ஒன்று அவமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.