முச்சந்தி

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன்

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் இன்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button