ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தி இல்லை: ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தி அடைய முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், பலரின் பொருளாதார நிலை தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றும் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்றும் கூறினார்.

கல்வி அல்லது ஊட்டச்சத்தை விட அதிகமான குடும்பங்கள் உணவு அல்லது ஆரோக்கியத்தை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குள் பிரவேசிக்கும் வேளையில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அதிகாரத்தில் இருப்பவர்கள் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாற்றத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவியல் விசாரணையில் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே அடைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button