விஷத்தால் போன உயிரை காட்டிலும் பயத்தால் போன உயிர்கள் ஏராளம்
கிராமங்களில் புற்கள் அல்லது தழைகளை அறுத்து தலையில் சுமந்து கொண்டு வருவோரை பார்க்கும் போது கண்கொள்ளாக் காட்சியாகயிருக்கும்.
பார்க்க அழகாக இருந்தாலும் புற்கள் அறுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, பாம்பின் மீது நடப்பதற்கு சமம்.
வருடத்திற்கு கிராமங்களில் மட்டும் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் அல்லது கிராமவாசிகள் பாம்பு கடியால் இறந்து போகிறார்கள்.
விவசாயிகள் கிராமவாசிகள் ஒவ்வொருவரும் விஷ பாம்பின் வகைகளை, அதன் வாழ்வியலை, அதன் பழக்க வழக்கங்களை, அதன் நடமாட்டத்தை தெரிந்துக் கொள்வது வாழ்வின் அடிப்படை கட்டாயம்.
நான்கு பாம்புகள் மட்டுமே விஷ தன்மை உடையது
1. Common Krait – கட்டுவிரியன்
2. Russell’s Viper – கண்ணாடி விரியன்
3. Indian Cobra – நல்ல பாம்பு
4. Saw scaled viper – சுரட்டை விரியன்
விஷத்தில் முதலிடத்தில் இருப்பது கட்டுவிரியன் இது கடித்துவிட்டால் 1 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
விஷத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பது கண்ணாடி விரியன் இது கடித்துவிட்டால் 3 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
விஷத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பது நல்ல பாம்பு இது கடித்துவிட்டால் 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
விஷத்தில் நான்காவது இடத்தில் இருப்பது சுரட்டை விரியன் இது கடித்துவிட்டால் இரண்டு நாட்கள் வரை உயிர் இருக்கும், ஆனால் உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது
பாம்பு கடித்துவிட்டால் நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று மேற்கொண்டு நேரத்தை வீணடித்து விஷப் பரிட்சை எடுப்பதை காட்டிலும் உடனே ஊரின் அரசு பொது மருத்துவமனையை அடைந்து அவசர சிகிச்சை மேற்கொள்வது ஆயுள்சிறந்தது
கட்டுவிரியன் கண்ணாடி விரியன் இரண்டும் இரவாடி, இரண்டும் பகலில் தென்படுவது சற்று அரிது, இரவு நேரங்களில் வயலுக்கு செல்வதை தவிர்த்து கொள்ள சாலச்சிறந்தது
நல்ல பாம்பு சுரட்டை விரியன் இரண்டும் கால நேரமில்லை இரண்டும் எல்லா வேலையும் உலாவரும் பாம்புகள்.
எலிகளை வேட்டையாட இவ்வகையான விஷ பாம்புகள் விளைநிலங்களை ஒட்டியிருக்கும் பொந்துகளில் அல்லது வரப்புகளில் படுத்து கிடக்கும், எதிர்பாராத விதமாய் விவசாயிகள் அல்லது கிராமவாசிகளின் கால்கள் அதன் மேல் படும் பட்சத்தில் உடனே தீண்டிவிடும்
மனித உணவு சுழற்சியில் அவைகளுக்கும் பங்கிருப்பதால் அவைகளும் நம்மோடு தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.
இருப்பினும் பாதுகாப்பு அவசியம், நமது குடும்பத்தை நம்மை தவிர வேறு எவராலும் ஆயுள் வரை நன்றாய் பார்த்துக் கொள்ள இயலாது.
சாரை, தண்ணீர், ஓலை, தயலாங்குட்டி, பச்சை, அலங்கார, கொம்பேரி, என்று கிராமங்களில் வாழும் எந்த விஷமற்ற பாம்பாக இருந்தாலும் அருகில் செல்வது விஷ பரிட்சை
அடிக்கடி விஷ பாம்புகள் விளைநிலத்தை சுற்றி நடமாடுவதை பார்க்கும் பட்சத்தில் வனத்துறைக்கோ அல்லது தனியார் பாம்பு பிடி வீரருக்கோ உடனே தகவல் அளித்து அப்பாம்பை அடிக்காமல் அங்கிருந்து அப்புறப் படுத்துவது அறிவானது.
விவசாயிகள் அல்லது கால்நடைகளுக்கு புற்கள் அறுக்க செல்வோர் எப்போதும் கையில் ஒரு குச்சியினை எடுத்து செல்லுங்கள், அக்குச்சியினை நடந்து செல்லும் போது தரையில் தட்டிக் கொண்டே நடந்து செல்லுங்கள், குச்சியின் அதிர்வினை உணர்ந்து வழியிலிருக்கும் விஷ ஜந்துக்கள் நகர அவையிடமிருந்து கடிபடாமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்
அதையும் மீறி விதியால் கடிபடும் பட்சத்தில் எறும்பு கடித்துவிட்டது சரியாகி விடுமென எதைப்பற்றியும் கவலைபடாமல், பதற்றம் அடையாமல் உடனே மருத்துவமனையை அடையுங்கள்.
காரணம் பாம்பின் விஷத்தால் போன உயிரை காட்டிலும் பயத்தால் போன உயிர்கள் எண்ணிக்கை ஏராளம்.