பலதும் பத்தும்

சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார்.
மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா.

அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை.
ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர் நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.
ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா. இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.

ஆனால், அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து…….

“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளி கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார்.

அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.*

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.*

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.*

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

முயற்சியை மூலதனமாக கொண்டு, தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் எவர்க்கும் வெற்றி கைகூடாமல் போனதில்லை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.