பலதும் பத்தும்

கடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன?

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார். பிரிட்டனை சேர்ந்த இவர், ‘கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர்.

விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருந்தார் அவர். கடவுளின் இருப்பு, பூமியில் வாழும் மனிதர்களின் முடிவு மற்றும் வேற்று கிரக மனிதர்களின் (ஏலியன்களின்) இருப்பு போன்ற முக்கியமான விடயங்களின் மீது விஞ்ஞானத்தின் கோணத்தில் இருந்து அவர்கள் சொன்ன கருத்துகள் வித்தியாசமானவை.

‘தி கிராண்ட் டிசைன்’ என்ற புத்தகத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளின் இருப்பை நிராகரித்தார்.

கடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து என்ன?

ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடிப்பதைப்பற்றி பேசும்போது, நமது சூரிய மண்டலத்தின் சமன்பாடு மற்றும் கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.

நமது சூரியனை சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய கிரகம் 1992ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு உதாரணத்துடன் புதிய கண்டுபிடிப்பு பற்றி ஹாக்கிங் கூறியது இதுதான்: “ஒரு சூரியன், பூமி மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம், சூரியனின் நிறை என நமது சூரிய மண்டலத்தின் வானியல் கூட்டமைப்பு தற்செயலானது என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மனிதர்களை மகிழ்விப்பதற்காக பூமி கிரகம் மிகவும் கவனமாக இருந்ததை நம்புவதற்கு தேவையான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.”

இதுபோன்ற கடுமையான கருத்துகளுக்காக மத அமைப்புகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார் ஹாக்கிங்.

பிரபஞ்சம் உருவாவதற்கு காரணம் ஈர்ப்புவிசை விதியே என்று அவர் திடமாக தெரிவித்தார்.

ஹாக்கிங் கூறுகிறார், “ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல் நிகழ்வுகள்தான், இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை.”

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்த கருத்துக்கு கிறித்துவ மத குருக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

ஹாக்கிங் ஏலியன்கள் பற்றி சொன்னது என்ன?

பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களில் ஏலியன்கள் இருப்பதாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங், அதுபற்றி எச்சரிக்கையும் விடுத்தார்.

‘பிரபஞ்சத்தில் வாழ்வு’ தனது புகழ்பெற்ற உரையில், மனிதர்களும், ஏலியன்களும் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பது பற்றிய தனது கருத்தை ஹாக்கிங் கூறியிருந்தார்.

இந்த மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி கூறுகிறார், “பூமியில் மனிதர்கள் உருவான காலம் நேரம் சரி என்றால், பிரபஞ்சத்தில் பூமி போன்ற வேறு பல நட்சத்திரங்கள் இருக்க வேண்டும், அவற்றில் பல பூமி உருவாவதற்கு ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கும்.”

“அப்போது, விண்மண்டலத்தில் உயிரியல் வாழ்வு ஏன் நமக்கு புலப்படவில்லை? வேற்று கிரகங்களில் வசிக்கும் யாரும் ஏன் இதுவரை பூமிக்கு வரவில்லை, பூமியை கைப்பற்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? பறக்கும் தட்டுகளில் (Unidentified flying object, UFO) களில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. பூமி, வேற்று கிரகவாசிகளுக்கும் முற்றிலும் திறந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன், இது அநேகமாக நமக்கு நன்மையளிக்கூடியதாக இருக்காது” என்று அவர் தெரிவித்தார்.

“பிரபஞ்சத்தில் உயிரினங்களின் இருப்பை ஆராய்வதற்காக, “சேடி” (search for extra-terrestrial intelligence (SETI)) என்ற திட்டம் முதலில் செயல்பட்டது. இதன்படி, ஏலியன்களிடம் இருந்து செய்திகளை பெறுவதற்கு வசதியாக ரேடியோ அலைகள் ஸ்கேன் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்து சென்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பணத் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.”

“ஆனால், இந்த முறையில் பெறும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும், அறிவியலில் இன்னும் சற்று முன்னேற்றம் அடையும்வரை காத்திருக்க வேண்டும், தற்போது இருக்கும் நிலையில் நாம் ஏலியன்களை சந்திப்பது என்பது, அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் மற்றும் கொலம்பஸ் இடையிலான சந்திப்பின் நவீன வடிவமாக இருக்கும். கொலம்பஸை சந்தித்த செவ்விந்தியர்களுக்கு நன்மை எதுவும் ஏற்பட்டதாக எனக்குக் தோன்றவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

மனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே

ஸ்டீஃபன் ஹாக்கிங் பூமியில் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றி ஒரு ஆச்சரியமான விடயத்தை அறிவித்தார்.

“மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன், மனிதகுலத்தை காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்” என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.