இந்தியா

ஜெர்மனியில் தமிழ் வளர்க்கும் தமிழ் இணைய கல்வி கழகம்

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் (Tamil Virtual Academy) முயற்சியால் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன்மூலம், ஜெர்மனியில்வாழும் தமிழ் குடும்பங்கள் பலன் பெறுகின்றன.

தமிழகத்திற்கு வெளியே பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்க் கல்வி பெறுவது எளிதாக இல்லை. இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் டிவிஏ எனும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தமிழ் பாடவகுப்புகள் இவர்களுக்கு பெரும் பலன் அளித்து வருகிறது.

டிவிஏ உதவியால், ஜெர்மனி வாழ் தமிழர்களும் தங்கள் பகுதிகளில் தமிழ்பாட வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த வகுப்புகள் ஜெர்மனியில் முதன்முதலாக மூன்சென் நகரில் தொடங்கப்பட்டது. மூன்சென்னில் வாழும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இதனால் பலன் பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் மூன்சென் தமிழ்ச் சங்கம் கடந்த 2017-ல் தொடங்கப்பட்டது. இதன் பிரிவான மூன்சென் தமிழ்கல்விக் கழகம் சார்பில் அந்நகரின் முக்கியப் பகுதியிலுள்ள ஸ்வாந்தலஸ் ஸ்ட்ராஸே அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இது, ஜெர்மனியில் பதிவாகி அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பாகும். மழலையர் கல்வி, தமிழ் நூலகம் மற்றும் தமிழ் மொழிபட்டயம் ஆகிய மூன்றும் அதன் முக்கிய நோக்கங்கள் ஆகும். இதனால்,ஜெர்மனி அரசு தனது ஒரு தொடக்கப் பள்ளி கட்டிடத்தில் 25 சதவீத வாடகையில் தமிழ் வகுப்புகளுக்காக இடம் அளித்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜெர்மனிவாழ் தமிழரும் மூன்சென் தமிழ் கல்விக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ராஜேஸ்வரி சுவாமிநாதன் கூறும்போது, ‘‘கடந்த மே, 2019-ல் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு இங்கு தமிழ் வகுப்புகளை தொடங்கினோம். தொடக்கத்தில் கரோனா பரவலால் பெயரளவில் இணையவழியில் வகுப்புநடத்தி வந்தோம்.

கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு காட்டும் தீவிர முயற்சியால் நல்ல பலன் கிடைக்கிறது. சுட்டி வகுப்புகள் முதல் மொத்தம் 5 வகுப்புகள் நடத்துகிறோம். இவற்றின் மாணவர்கள் தமிழ் வார்த்தைகளை உரிய உச்சரிப்புடன் வாசித்து புரிந்துகொள்கின்றனர். தமிழ் பயிலும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகளில் ஜெர்மன் அரசின் கல்வித்துறை கூடுதலாக சில புள்ளிகளும் அளிக்கிறது” என்றார். செப்டம்பர் முதல் ஜுலை வரையிலான ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வார விடுமுறை நாட்களில் மட்டும் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதற்காக மூன்சென் தமிழர்கள் தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். வகுப்பு முடியும் வரை காத்திருந்து குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். மூன்சென் தமிழர்களை பார்த்து, ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட், ஹாம்பர்க் நகரங்களில் வாழும் தமிழர்களும் தமிழ் வகுப்பு களை நடத்துகின்றனர்.

தமிழ் கட்டாயம்: இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மதுரை தமிழரும் மூன்சென் கல்விக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவருமான அருண்குமார் சின்னமணி கூறும்போது, “ஒவ்வொரு வகுப்பையும் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்குகிறோம். இங்கு பல்வேறு பணிகளில் உள்ள தமிழர்களே இதன்ஆசிரியர்களாகி தொண்டு செய்கின்றனர். எங்களை பார்த்து இங்கு வாழும் தென்னிந்தியர் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலத்தவரும் தங்கள் தாய்மொழிக்கான வகுப்புகளை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் சில உயர்க்கல்வி மற்றும் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தமிழர்கள் தமிழ்நாடு திரும்பினால் இந்தத் தேர்வுகளுக்கும் தமிழ் வகுப்புகள் பலன் அளிக்கும்’’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.