பொலிஸ் உடற்தகுதித் தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் பலி
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொலிஸ் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து சுருண்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரமான வெயிலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால் கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு பல்வேறு மையங்களில் ஓகஸ்ட் 22ஆம் திகதி முதல் நடத்தப்பட்டு வந்தது. மொத்தம் 7 நிலையங்களில் இந்த உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் பொலிஸ் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் ஈடுபட்ட தேர்வர்கள் ஒவ்வொரு நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. பலமு நிலையத்தில் அதிகபட்சமாக 4 பேர் மரணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் மேலும் பலர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இவர்களில் பலர் ஊக்க மருந்து எடுத்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
பொலிஸ் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்று உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சியான பா.ஜ.கவோ, ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசின் அலட்சியம்தான் இத்தகைய மரணங்களுக்கு காரணம் என குற்றம்சாட்டி வருவதால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.