கவிதைகள்
அழகு மலர் ஆட… கவிதை… ஸ்ரீவாரி மஞ்சு
விரலுக்கும் மனதுக்கும் நளினம்
கொடுத்தே இருக்க வேண்டுமென்பது
எனக்கும் மனதுக்குமான ஒப்பந்தம்…
“அழகு மலர் ஆட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதைக் கேள்”….
ரேவதியின் நடனத்தில் லயித்த மனமோ…
பரதக் கலைஞராகும்
அதி பெரும் ஆர்வத்தில்
குழுமிய
என் குட்டி குழுமத்தோடு
தெருமுனையில் ஜதிகள் போட
முதுகில் ஜதிகளிட்டார் அப்பா….
காட்டன் சேலையுடுத்தி
வலை கொண்டையிட்ட
வள்ளியம்மை தமிழாசிரியர் மேல்….
சொல்லொன்னாக் காதல்
அவரைப் போலவே
ஆசிரியராகி விட…..
ஆங்கிலமென்ற
புயலோ பள்ளத்தில் தள்ளிவிட…
வள்ளியம்மை அதி தூரத்திலேயே நின்று விட….
இப்படியாக…
ஊழிப் பெருமழையாய் ஊற்றெடுத்த தெல்லாம்…
கொல்லைப்புறத்தில்
துருத்தி வந்த பெருமூச்சில்
சாம்பல் வீசி
சொக்கப்பனையென சுடர் விட்டு விட்டு எரிந்ததில்….
அலங்கார வண்ண முகத்திரைக்குள்
எனதான முகம்
நினைவில் தப்பிய முகமானது…
ஸ்ரீவாரி மஞ்சு