”அறைக்குள் செல்லும்போதே அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்”; சஞ்சய் ராயின் வழக்கறிஞர் கூறுவது என்ன?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சஞ்சய் ராயிடம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிரிவி காட்சிகள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட ப்ளூடூத் ஹெட் செட் போன்றவை சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்பதை வலுவாக கூறுகின்றன. ஆனால், தற்போது சஞ்சய் ராய் நிரபராதி என்பதுபோல அவரது வழக்கறிஞர் கவிதா சர்க்கார் சில விபரங்களை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
அதாவது, உண்மைக் கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராயிடம் 10 வினாக்கள் கேட்கப்பட்டன.
அதில், பெண்ணை கொலை செய்ததன் பின்னர் என்ன செய்தாய்? எனும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சஞ்சய் ராய், “நீங்கள் கேட்பது தவறு. நான் கொலை செய்யவே இல்லை” எனக் கூறியதோடு, தான் செமினார் நடக்கும் ஹோலுக்குச் செல்லும்போதே அப் பெண் மருத்துவர் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறியதும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
அந்த சோதனை அறிக்கைப்படி, சம்பவம் நடந்த ஒகஸ்ட் 9ஆம் திகதி இரவு செமினார் ஹோலுக்குள் நான் செல்லும்போதே அப் பெண் மருத்துவர் மீது முழுவதும் இரத்தம் படிந்திருந்தது. அதனால் பயத்தில் அவ்விடத்தை விட்டு ஓடி வந்தேன் என சஞ்சய் ராய் தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் கவிதா சர்க்கார் கூறியுள்ளார்.
ஆரம்பத்திலேயே சஞ்சய் ராய் தான் நிரபராதி என்பதை ஏன் கூறவில்லை எனும் கேள்விக்கு பதிலளித்த கமலா, “அப்போது சஞ்சய் ராய் மிகவும் பயந்துபோய் இருந்ததோடு, தான் கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சஞ்சய் ராயால் எளிதாக அந்த செமினார் அறைக்குள் நுழைய முடிந்திருந்தால், அவருக்கு முன்பு வேறு யாரோ அந்த இடத்தின் பாதுகாப்பின்மையை பயன்படுத்தியுள்ளனர்.
எனவே உண்மையான குற்றவாளி வேறு எங்கேயோ ஒளிந்துள்ளான் எனவும் வழக்கறிஞர் கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில வேளைகளில் வழக்கை திசை திருப்புவதற்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளதா? அல்லது உண்மையில் இதுதான் நடந்ததா? என்பது விசாரணைகளில் தெரிய வரும்.