இலங்கை

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் ஆதரவு கோரிய சஜித்: கஜேந்திரகுமார் விதித்துள்ள நிபந்தனை

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும் வகையில், ஒற்றையாட்சியை இல்லாதொழித்து சமஷ்டி யாப்பை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்பதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோரி வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஓகஸ்ட் 21ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் தம்மை ஆதரிக்க வேண்டுமென விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் ஓகஸ்ட் 28 புதன்கிழமை எழுத்துமூல பதிலை வழங்கியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், ஒற்றையாட்சி ஊடாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியில் தற்போது நடைமுறையில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வோ அல்லது தீர்விற்கான ஆரம்பப் புள்ளியோ அல்ல என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என சஜித் பிரேமதாசவிடம் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு சென்றமைக்கு ஒற்றையாட்சிக் கட்டமைப்பே காரணம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த 76 வருடங்களாக இலங்கையின் அனைத்து மதங்களுக்கும், இனங்களுக்கும் சம அந்தஸ்தை வழங்க மறுத்து, தேசிய இனங்களுக்கிடையில் தீராப்பகையையும் வெறுப்பையும் தீவிரமாக்கி, தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போருக்கு வழிகோலியதுடன் போர் முடிவடைந்து 13 வருடங்களின் பின்னர் நாடு பொருளாதார வங்குரோத்து நிலை அடைவதற்கும் காரணமாக அமைந்தது தற்போதய ஒற்றையாட்சி அரசியல் யாப்பேயாகும்.”

பொருளாதாரத்தை மீட்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரிடம் ஒரு நாட்டிற்குள் இரு தேசங்களாக ஆட்சி செய்யக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்துள்ளது.

“இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், அனைத்து இன, மத மக்களும் நிம்மதியாக, அச்சமின்றி வாழ்வதற்கும், புலம்பெயர் தமிழ் மக்கள் அச்சமின்றி முதலீடுகளை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களாக வாழக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வே ஒரே வழியாகும்.”

இவ்வாறானதொரு அரசியலமைப்பு உருவாக்கத்தில், ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படல் வேண்டும், இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்படல் வேண்டும், தமிழர் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும், தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும், ஆகிய நான்கு அடிப்படைக் கோரிக்கைகள் சஜித் பிரேமதாசவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

ஓகஸ்ட் 24ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது, வாக்களிக்க வேண்டாம் என்ற கோரிக்கை தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறி பொலிஸார் அதனை தடுத்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேர்தல் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, வாக்களிப்பதை தடுக்கும் பிரச்சாரத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்கை செலுத்தாது இருக்குமாறு கையேடு விநியோகிப்பது அரசியல் அமைப்புக்கு அமைய மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதோடு தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல் என அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க தெரிவித்ததாக, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.டி.பாலித பத்மகுமாரவினால் அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.