அமெரிக்க படைகள் ஈராக்கில் கூட்டு தாக்குதல்; 15 ஐஎஸ் உறுப்பினர்கள் பலி
அமெரிக்க மற்றும் ஈராக் படைகளின் கூட்டு நடவடிக்கையில் மேற்கு ஈராக்கில் இஸ்லாமிய அரசு குழுவைச் சேர்ந்த ஐஎஸ் (ISIS) 15 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய அரசு தலைவர்களை குறிவைத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் விளைவாக 15 ஐஎஸ்ஐஎஸ் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பொது மக்கள் உயிரிழந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று சென்ட்காம் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது.
ஐஎஸ் பிராந்தியத்திற்கும், நமது நட்பு நாடுகளுக்கும், நமது தாய்நாட்டிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
அமெரிக்க சென்ட்காம் எங்கள் கூட்டணி மற்றும் ஈராக் பங்காளிகளுடன் சேர்ந்து, இந்த தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆக்ரோஷமாக தொடரும் என்றும் அது மேலும் கூறியது.
பாக்தாத் மற்றும் வொஷிங்டன் ஈராக்கில் ஜிஹாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைகள் இருப்பு குறித்து பல மாதங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று ஈராக்கின் குறிக்கோளாக இருந்த போதிலும், காலக்கெடு எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிரான சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஈராக்கில் 2,500 படையினரையும், சிரியாவில் 900 படையினரையும் நிலை நிறுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்களால் கூட்டணிப் படைகள் பல முறை குறிவைக்கப்பட்டும் உள்ளன.