தேர்தல் பிரச்சாரம் சென்ற அனுரவின் ஆதரவாளர்கள்; 88,89 ஐ ஞாபகப்படுத்தி தாக்குதல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் துண்டுபிரசுரங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மாத்தளை, பலகடுவ பிரதேசத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழுவொன்றை 88/89 காலப்பகுதி நினைவிருக்கிறதா என அங்கிருந்த சிலர் வினவியதுடன், மீண்டும் இங்கு வரவேண்டாம் என அச்சுறுத்தி தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெண் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
”தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மாத்தளை பலகடுவ வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த குழுவொன்று அச்சுறுத்தி தாக்க முற்பட்டனர்.” அளிக்கப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.