கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை; முதற்கட்ட அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் என்பவரை இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ் வழக்கு தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.வை.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர், இவ் வழக்கின் முதற்கட்ட அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அறிக்கையில், பெண் மருத்துவரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகே முதல் தகவல் அறிக்கை (First Information Report – FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதாகவே அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை நடந்த ஐந்தாவது நாள் மருத்துவமனைக்கு சென்றபோது குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டிருந்தது. என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா பொலிஸாரும் இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.