மருத்துவர் பாலியல் படுகொலை; கொல்கத்தாவில் பேரணி, கூட்டங்களுக்கு தடை – மேற்கு வங்க காவல் துறை உத்தரவு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்த தடைவிதித்து அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை ஆணையர் வினீத் குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டப்பிரிவு 163-ன் கீழ் மருத்துவமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம்,பேரணிகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த தடை உத்தரவு வரும் சனிக்கிழமை (ஆக. 24) வரைஅமலில் இருக்கும். மருத்துவமனையை சுற்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவது இந்த உத்தரவின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தாவின் குறிப்பிட்ட பகுதிகளில் லத்திகள் மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரணி, ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டங்கள் மூலம் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்ஏற்படுவதை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொல்கத்தா, தெற்கு 24 பர்கானாஸ் உள்ளிட்டபகுதிகளில் அசம்பாவிதங்களைதடுக்கும் நோக்கில் மக்கள் கூடுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவருக்கு சம்மன்: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி பாஜகதலைவர் லாக்கெட் சாட்டர்ஜிக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சாட்டர்ஜியுடன் சேர்த்து, பிரபல இருதயநோய் நிபுணரான டாக்டர் குணால் சர்க்கார், பூர்பா பர்தமான் மாவட்டத்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுபர்ணா கோஸ்வாமி உட்பட 59 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொலையான மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியது, தவறான தகவல்களை சமூகவெளியில் பரப்பியது தொடர்பாக லால் பஜாரில் உள்ள கொல்கத்தாகாவல் துறை தலைமையகத்தில் அதிகாரிகள் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அனுப்பிய சம்மனில் காவல் துறை தெரிவி்த்துள்ளது.