ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை கொண்டவரா?; அடுத்த வாரம் வழக்கு விசாரணை
இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் குடியுரிமைக்கு எதிராக பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் காங். கட்சியைச் சேர்ந்த ராகுல், பிரிட்டன் குடியுரிமை பெற்று அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளார். இது 1955 மக்கள் பிரிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு எதிரானது, அவரது இந்திய குடியுரிமையை பறிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் சுப்ரமணிய சுவாமி சார்பில் வழக்கறிஞர் சத்யா சபர்வால், டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்குடன் பிரிட்டனில் இயங்கி வரும் பேக்கூப்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2003ஆம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி பெற்றுள்ள கடிதம் சமர்பிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில் காங். எம்.பி. ராகுல், பேக்ஓப்ஸ் லிமிடெட் என்ற பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குனர், மற்றும் செயலராக உள்ளார். இந்நிறுவனம் கடந்த 2005-06ஆம் ஆண்டு தாக்கல் செய்த வருடாந்திரா அறிக்கையில் நிறுவனத்தின் இயக்குனரான ராகுல் குறித்த தகவலில் 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் ஆண்டு ராகுல் பிறந்த திகதியுடன், குடிமகன் என்ற இடத்தில் பிரிட்டன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராகுல் இந்திய குடிமகன் என கூறிக்கொண்டு, பிரிட்டன் குடியுரிமை இன்றுவரை வகித்து வந்துள்ளார். இது குறித்த மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.
இது அரசியமைப்பு சட்டத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும் எதிரானது. அவரது குடியுரிமை குறித்து தற்போதைய நிலை என்ன என விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். என கூறியிருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ராகுல் இரட்டை குடியுரிமை பெற்றவர். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.