பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: மோகன் பகவத் வலியுறுத்தல்
”அண்டை நாட்டில் (பங்களாதேஷில்) இந்துக்களான சிறுபான்மையின மக்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
பங்களாதேஷ் முழுவதும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறையாளர்கள், இந்துக்கள், அவர்களின் வீடுகள், சொத்துகள், கோயில்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இது இந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து இந்துக்கள் டாகாவில் ஒன்று கூடி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலத்தில் தேசிய தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வருங்கால தலைமுறைக்கு சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. எப்போதும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் மக்கள் உள்ளனர். எனவே நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவும் பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. அண்டை நாட்டில் (பங்களாதேஷில்) இந்துக்களான சிறுபான்மையின மக்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.