போராட்டமாக உருவெடுத்த மாணவியின் கொலை: உடற்கூறாய்வு அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
இந்தியாவின் கொல்கல்தா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (13) மருத்துவமனை கூட்ட அரங்கில் முதுநிலை படிக்கும் மாணவி ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டதையடுத்து குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போது உயிரிழந்த மாணவியின் கண்கள், வாய், அந்தரங்க உறுப்புகளில் இரத்தம் காணப்பட்ட நிலையில், இடதுகால், கழுத்து, வலது கை, உதடுகளில் காயங்கள் காணப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மாணவியை கொலை செய்துவிட்டு இதன்பின்பு பாலியல் துஸ்ப்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், கொலை குற்றவாளி, மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்லும் காவல் தன்னார்வலர் என்பது தெரியவந்தது.
மேலும், கொலை செய்த பின் எந்த பதற்றமும் இல்லாமல், தப்பியோடாமல், இரத்தக் கறைகள் இருந்த உடைகளை துவைத்த அந்த நபர், பின்னர் அருகில் உள்ள விடுதிக்குச் சென்று நன்றாக உறங்கியிருக்கிறார்.
குறித்த சந்தேகநபரின் பாதணிகளில் படிந்திருந்த இரத்தக்கறைகளைக் கொண்டு அவர் தான் கொலையாளி என்பதை உறுதி செய்த பொலிஸார், சிசிரிவி காட்சிகளையும் சோதனைக்குட்படுத்தியதில் இருந்து அவரை கைது செய்தனர்.
போராட்டத்தில் குதித்த மாணவர்கள் – மருத்துவர்கள்
மேற்குவங்கத்தை அதிர வைத்துள்ள இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவற்றை அடிப்படையாக வைத்து, அரசியல் அழுத்தம் அதிகரித்த நிலையில், கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் சனிக்கிழமைக்குள் விசாரணை முடியாவிட்டால், அதன்பிறகு சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடருமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதிக் கேட்டு நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மருத்துவர்களை அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.