ராகுலை மீண்டும் விசாரணைக்கு அழைக்க அமுலாக்கத்துறை திட்டம்!
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்ட் (National Herald) பத்திரிகை தொடர்புடைய பண மோசடி வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பானை அனுப்ப அமுலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஏதுவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த வாரம் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மக்களவையில் மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளதாகத் தான் பேசியது சிலருக்குப் பிடிக்கவில்லை எனவும், அமுலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகவும், அவர்களது வருகைக்காக தான் காத்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.