இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் கண்காணிப்பு: அமைக்கப்பட்ட விசேட குழு
தற்போதைய நிலவரத்தை கண்காணிப்பதற்கு இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் குழுவொன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷாவின் எக்ஸ் பதிவில், “பங்களாதேஷில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்திய – பங்களாதேஷ் எல்லையில் தற்போதைய நிலைமையை கண்காணிக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
பங்களாதேஷில் உள்ள இந்திய குடிமக்கள், மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டில் உள்ள தங்களுக்கு இணையான அதிகாரிகளுடன் ஐவர் கொண்ட இந்தக் குழு தொடர்புகளை மேற்கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.
பல வாரங்களாக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களால், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு சென்றதன் பின்னர் அங்கு அரசில் நெருக்கடி ஏற்பட்டது.
இதன்பின்னர்,அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
மேலும் ஹசீனாவின் பதவி விலகலின் பின்னர் பங்களாதேஷின் நிலைமை தொடர்பில் இந்திய வெளிவிகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இதன்போது சிறுபான்மையினரின் நிலை தொடர்பில் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.