சத்திலா மண்ணில் வித்து முளைக்குமா?… கவிதை… சங்கர சுப்பிரமணியன்.
வான்வெளியும் விரிந்து கிடக்கிறது
காற்றும் மிகவும் நன்றாக வீசுகிறது
நல்ல பட்டம் ஒன்று இங்கு உள்ளது
பட்டம் விடுகின்ற சூழலுமே உள்ளது
அழகான பட்டத்தை வானில் விடலாம்
மகிழ்ச்சியுடனும் பட்டத்தை விடலாம்
உயர உயர செல்லும்படியாக விடலாம்
ஓய்வின்றி பட்டத்தை விட்டு மகிழலாம்
பட்டம்விட வசதியில்லாது போனால்
பட்டம் வாங்க காசில்லாது போனால்
பட்டம் ஒன்று எனக்கு கிடைத்தாலும்
வயிறு பசித்து அனலாய் தகிக்கிறதே
பட்டம்விடு பட்டம்விடு என்கிறார்களே
பட்டம் விற்பவரானல் விற்னையே குறி
பட்டம் விடுவதை பார்த்து மகிழ்பவரா
பட்டம் விடுபவனின் நிலையைப் பாரீர்
பட்டனி பஞ்சம் அறியாதவர் என்றால்
வாழ்க்கையின் போராட்டம் தெரியாது
வாழ்க்கையே போராட்டம் ஆனவர்க்கு
பட்டத்தை நினைக்க நேரமிருக்காது
எழுந்து நின்று கயிறை இழுக்கணுமே
வயிறு பசியால் சுண்டி இழுக்கின்றதே
உயர பறப்பதை எப்படிப் பார்ப்பேன்
பசியால் கண்கள் மங்கலாய் தெரியுதே
பசியின் கொடுமையை உணராதாரே
பட்டம் விடு பட்டம் விடு என்கின்றார்
வாழ்கின்ற வயதினில் பசி போக்கிடவே
என்ன வழியென எண்ணிப் பார்ப்பேனா
பட்டம் விட வழி எதுவெனத் தேடுவேனா
பட்டம்விட சொல்வாரை குறைகூறவில்லை
பசியென்பதை சிறதளவும் உணராதவரிங்கு
பசித்தவனின் பசியாற்ற வழியை சொல்லார்
தண்ணீரில் மூழ்குபவனை காணாதவனாக
எனவே என்னை பட்டம்விட சொல்லாதீர்
ஊனமானவரை ஓடுபவரோடு ஒப்பிடாதீர்
கதைக்கவியலாரை கவிபாடக் கூறாதீர்
பார்வையற்றாரை படம் கீறச் சொல்லாதீர்
பட்டமென்பதை மாற்றியும் சொல்லவரும்
பாடு ஓடு ஆடு என்றெலாம் சொல்ல வரும்
எதையுமாற்ற ஆற்றலும் வேண்டுமன்றோ
செய்கின்ற செயலுக்கு தேவை புரியாதோ
பட்டத்தை எப்பவும் விட்டு மகிழ்ந்திடலாம்
பட்டம் விடாமல் வாழ்ந்தவர் இங்குண்டாம்
வித்து மண்ணிலே விழுந்தால் முளைக்கும்
சத்திலா மண்ணில் வித்து முளையாதன்றோ!
-சங்கர சுப்பிரமணியன்.