கண்ணீர் வாழ்க்கை!…. கவிதை… கிறிஸ்டி நல்லரெத்தினம்
கதறி அழு என்று அவன் கண்களில் நீர் வைத்தான்!
சுவைக்கட்டும் என்று சொட்டு உவர்ப்பும் சேர்த்து வைத்தான்!
கனவை நெஞ்சில் வைத்து
கவலையும் சேர்த்து வைத்து
வாழடா வாழு என்று
கருவறைக்கு அனுப்பி வைத்தான்!
வந்து நான் பிறந்து விட்டேன்
வானில் அவன் நின்று கொண்டான்!
வலிய வந்த உறவுகளும்
வாடி நின்ற தாய்ப் பசுவும்
கூடி வந்த நண்பர்களும்
கொஞ்ச வந்த பைங்கிளியும்
கொண்டு வந்த சோகங்களை
குழைத்து உள்ளே அனுப்பி வைத்தேன்!
குடத்தில் கல் நிரப்பி
குளமாக்கி நீர் பருகும்
காக்கைகள் பல வந்து
கூடாரம் அமைத்ததம்மா!
வானத்தில் வட்டமிடும் வல்லூறு வடிவத்தில்
சாவு என்னை சாகடிக்க
சதித் திட்டம் போடுதம்மா!
தூரத்தில் நின்று கொண்டு
துதி பாட கேட்பதென்ன?
பக்கத்தில் வந்தமர்ந்து
பக்தி மார்க்கம் சொல்லி வைப்பாய்!
கடுகுக்குள் மரத்தை வைத்தாய்
மலருக்குள் மணத்தை வைத்தாய்
கருவுக்குள் என்னை வைத்தாய்
எனக்குள் ஏன் கவலை வைத்தாய்?
போதுமையா இவ்வாழ்வு
போகும் இடம் புரியவில்லை!
அனுப்பி வைத்த உனக்கு இன்னும்
அழைத்துக் கொள்ள தெரியல்லையே!
ஆசைகளை துறந்து இங்கே
அம்மணமாய் நிற்கின்றேன்!
அழைத்து என்னை அணைத்துக்கொள்
ஆண்டவனே பரம் பொருளே!
அன்புடன்
கிறிஸ்டி