இந்தியா

இந்தியக் குடியுரிமையைத் துறந்த 2 இலட்சம் இந்தியர்கள்: காரணம் என்ன?

2023 ஆம் ஆண்டில் 2.1 இலட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளதாக அந்நாட்டு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புது டில்லியில் நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் தரவுகளை இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் சமர்ப்பித்தார்.

தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில், குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2,16,219 ஆக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் 2,25,620 பேரும், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேரும், 2020 ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2019 ஆம் ஆண்டில் 1,44,017 எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்களின் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் ராகவ் சதா,

இத்தகைய அதிக எண்ணிக்கையிலான துறவறம் மற்றும் இந்தியக் குடியுரிமையை ஏற்றுக்கொள்பவர்களின் குறைவான எண்ணிக்கை போன்றவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதா?

மேலும், குடியுரிமைத் துறப்பின் மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு மற்றும் வளமான தொழிலதிபர்களின் இழப்பைத் தடுப்பதற்கும் அரசு முயற்சித்ததா? என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, “குடியுரிமையைத் துறப்பதற்கும், ஏற்பதற்கும் உள்ள காரணங்கள் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். உலகில் எங்கு வேண்டுமானாலும் தொழில் புரியலாம் என்பதை இந்திய அரசு அங்கீகரித்துள்ளதால், பலரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் வெற்றிகரமான, வளமான மற்றும் செல்வாக்குமிக்க இந்தியர்கள் இந்தியாவுக்கு சொத்தாகத் திகழ்கின்றனர்” என்று கீர்த்திவர்தன் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்களாக, 2019ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6,75,541ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 13,35,878ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, 2019 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், விபத்துக்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.