இந்தியா

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 166 பேர் உயிரிழப்பு: இரு இலங்கை தமிழர்களும் பலியாகியுள்ளனர்

கேரளா – வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், சுமார் 180 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலச்சரிவால் வயநாடு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த நிலச்சரிவு குறித்து ஜூலை 23ஆம் திகதி முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரண்டு இலங்கை தமிழர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை வாழும் காளிதாஸ் மற்றும் கூடலூர் அய்யன்கொள்ளியில் வாழும் கல்யாணக் குமார் ஆகியோர் கேரளா வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்துள்ளமை கவலையளிக்கிறது.

கேரள வயநாடு பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், 120இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமையை மிகவும் கவலைக்குரியதாகும்.

விரைவில் இந்த இயற்கை இடரில் இருந்து கேரளா மாநிலம் மீள வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்த பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்கள் எதிர்கொண்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நான் ஆராய அங்கு சென்றிருந்தேன். அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் கொண்டுவந்திருந்தேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள கூடலூர் காளிதாஸ் மற்றும் கல்யாணக் குமாரி ஆகியோர் நான் கூடலூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் எனது கூட்டத்திற்கு சமூகமளித்தது என் மனதில் நினைவளிக்கிறது.

எதிர்பாராது ஏற்பட்டுள்ள இவர்களது இழப்பு கவலையளிப்பதுடன், இவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.